நாங்களும் இந்துக்களே இந்துத்துவாவை யாரும் குத்தகைக்கு எடுக்கவில்லை சித்தராமையா பேச்சு
நாங்களும் இந்துக்களே, இந்துத்துவாவை யாரும் குத்தகைக்கு எடுக்கவில்லை என்று சித்தராமையா கூறினார். நாங்களும் இந்துக்களே... பெலகாவி மாவட்டம் யமகனமரடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல
பெலகாவி,
நாங்களும் இந்துக்களே, இந்துத்துவாவை யாரும் குத்தகைக்கு எடுக்கவில்லை என்று சித்தராமையா கூறினார்.
நாங்களும் இந்துக்களே...பெலகாவி மாவட்டம் யமகனமரடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, தனது அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கர்நாடகத்தில் சிலர் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். நாங்கள் இந்துத்துவா, இஸ்லாமிய, கிறிஸ்தவ கொள்கைகளுக்கு எதிரானவர்கள் கிடையாது. நாங்களும் இந்துக்களே. இந்துத்துவாவை யாரும் குத்தகைக்கு எடுக்கவில்லை. உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகிஆதித்யநாத் இங்கு வந்து சித்தராமையா, திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை நடத்துவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
பசவண்ணரின் உருவ படத்தை...நாங்கள் திப்பு ஜெயந்தி விழா மட்டும் நடத்தவில்லை. அம்பேத்கர், கனகதாசர், வால்மீகி, கித்தூர் ராணிசென்னம்மா, கெம்பேகவுடா, கிருஷ்ண ஜெயந்தி விழாக்களையும் நடத்துகிறோம் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதை அவர் தெரிந்து பேச வேண்டும். அனைத்து ஜெயந்திகளையும் நாங்கள் கொண்டாடுகிறோம். அவர்களை போல் ஒரு குறிப்பிட்ட ஜெயந்தியை தவிர்த்துவிட்டு மற்ற ஜெயந்திகளை நாங்கள் கொண்டாடுவது இல்லை.
வரலாற்று நாயகர்கள், பெரிய மகான்கள், சாதுக்களின் ஜெயந்திகளுக்கும் நாங்கள் விழா நடத்துகிறோம். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இத்தகைய விழாக்களை பா.ஜனதாவினர் நடத்தாதது ஏன்?. விஜயாப்புராவில் மகளிர் பல்கலைக்கழகத்திற்கு லக்கமாதேவி பெயரை சூட்டியுள்ளோம். அனைத்து அரசு அலுவலகங்களிலும் பசவண்ணரின் உருவ படத்தை வைக்கும்படி நாங்கள் உத்தரவிட்டோம்.
நல்லிணக்கம் இல்லாவிட்டால்...கண்ணை மூடிக்கொண்டு திப்பு சுல்தான் ஒரு மதவாதி என்று கூறி அவரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்துவது சரியல்ல. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சுதந்திரம், சமத்துவத்தை ஏற்படுத்த ஒவ்வொரு அரசியல்வாதியும் பாடுபட வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் முன்னேற்றம் இல்லாமல் உள்ள மக்களையும், நியாயம் கிடைக்காமல் அவதிப்படும் மக்களையும் முன்னேற்றுவது நமது கடமை. இதைத்தான் அரசியல் சாசனம் சொல்கிறது.
அம்பேத்கர் இதைத்தான் சொன்னார். பசவண்ணரும் இதையே கூறினார். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கையாக இருந்தது. சமுதாயத்தில் அமைதி, நல்லிணக்கம் இல்லாவிட்டால் அந்த சமுதாயம் முன்னேற்றம் அடைய முடியாது. எடியூரப்பாவின் அழைப்பின் பேரில் உத்தரபிரதேசத்தில் இருந்து இங்கு வந்து யோகிஆதித்யநாத் பேசிவிட்டு சென்றுள்ளார்.
கனவு இங்கு பலிக்காதுநான் கர்நாடக மண்ணின் மகன். 6½ கோடி மக்களின் மகன். சட்டம்–ஒழுங்கு குறித்து யோகிஆதித்யநாத் எங்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டாம். உங்கள் மாநிலத்திற்கு சென்று அங்கு சூழ்நிலை எப்படி உள்ளது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். கர்நாடகத்தின் வரலாறு உங்களை விட எனக்கு நன்றாகவே தெரியும். கர்நாடகத்தை யாரும் ‘ஜங்கள்’(வனப்பகுதி) என்று அழைக்க மாட்டார்கள். உத்தரபிரதேசத்திற்கு தான் இந்த பெயர் உள்ளது.
கர்நாடகம் பசவண்ணர், கனகதாசர், குவெம்பு, வால்மீகி, ராணி சென்னம்மா உள்ளிட்ட பெரிய மகான்கள் வாழ்ந்த மண். இங்கு நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பா.ஜனதாவினர் கனவு இங்கு பலிக்காது. கர்நாடக மக்கள் அறிவார்ந்தவர்கள். மக்கள் ஆழ்ந்து யோசித்து முடிவு எடுக்கும் திறன் உள்ளவர்கள். யாரை ஆதரிக்க வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்.
உரிமை மீறல் பிரச்சினையை...நாங்கள் நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம். நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து முழு விவரங்களுடன் விளம்பரம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துமாறு மந்திரி எம்.பி.பட்டீலுக்கு கூறி இருக்கிறேன். அதை பார்த்து எடியூரப்பா தெரிந்துகொள்ள வேண்டும். அதில் ஏதாவது தவறு இருந்தால் சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வாருங்கள்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.