அலைவரிசை வழக்கு தீர்ப்பு தந்த அதிர்வலை
‘நாட்டையே உலுக்கி எடுத்த ஊழல்’, ‘அரசியல் ரீதியாக பூகம்பத்தை ஏற்படுத்திய ஊழல்’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது 2ஜி அலைவரிசை வழக்கு.
தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மத்திய மந்திரியாக இருந்தபோது, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமம் வழங்குவதில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்ற மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அடிப்படையில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக பதிவு செய்தது தான் இந்த வழக்கு. இதில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது. பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் நேற்று காலையில் அந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என்ற ஒற்றை வரியில் தீர்ப்பை அறிவித்தார் நீதிபதி ஓ.பி.சைனி. அவ்வளவு தான் தாமதம் நீதிபதியை நோக்கி இரு கரங்களையும் குவித்து கண்ணீர் மல்க நன்றி கூறினார், ஆ.ராசா.
2007-ம் ஆண்டில் சர்ச்சையாக தொடங்கி, குற்றச்சாட்டுக்களாக வெடித்து, விசாரணை, வழக்கு, கைது, ஜாமீன் என பல்வேறு திருப்பங்களை கண்டது இந்த வழக்கு.
2010-ம் ஆண்டில் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நிகழ்ந்த குளறுபடியால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், விதிகளும், நடைமுறைகளும் வெகுவாக தளர்த்தப்பட்டதாகவும் அதிரடியாக தெரிவித்த குற்றச்சாட்டுகள், இடைத்தரகர் நீரா ராடியா பல்வேறு பிரபலங்களுடன் பேசிய தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள், அவற்றை வைத்துக் கொண்டு டெல்லியில் பிரசாந்த் பூஷன் போன்ற வக்கீல்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒவ்வொன்றாக வெளியிட்டது என வழக்குக்கு முன்பும் பின்பும் பல்வேறு பரபரப்புகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதுதொடர்பாக சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோர் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் தொடர்ந்த வழக்குகள், ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி 2ஜி வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டது போன்றவை அப்போது பரபரப்பாக பேசப்பட்டவை.
2ஜி அலைவரிசை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல் வழக்கை ஆ.ராசா, கனிமொழி, முன்னாள் தொலைத்தொடர்பு செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் உதவியாளர் சண்டோலியா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இரண்டாவதாக ஒரு வழக்கை எஸ்ஸார் நிறுவனத்தின் தலைவர் ரவி ரூயா உள்ளிட்டோர் மீது பதிவு செய்தது.
அடுத்ததாக, 2ஜி அலைவரிசை உரிமம் ஒதுக்கீடு முறைகேடு மூலம் பெறப்பட்ட பணம் சட்டவிரோதமாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்பட்டதாக மத்திய அமலாக்கப்பிரிவு மூன்றாவதாக ஒரு வழக்கை தொடர்ந்து குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், அமிர்தம் உள்ளிட்டோரையும், சில தனியார் நிறுவனங்களையும் குறிப்பிட்டு இருந்தது.
இந்த மூன்று வழக்குகளில் இருந்தும் தற்போது குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அன்று வெளியான இந்த தீர்ப்பு நிச்சயம் தி.மு.க.வின் வரலாற்றில் பதிவாகப்போகும் ஒரு மகிழ்ச்சியான நாளாகத்தான் இருக்கும்.
ஏனென்றால், 2ஜி சர்ச்சை எழுந்த நாளில் இருந்து தீர்ப்பு வரை தி.மு.க.வை எதிர்த்த, எதிர்க்கும் கட்சிகளின் மிகப்பெரிய ஆயுதமாக அந்த வழக்கு இருந்தது. அதை வைத்து தான் அரசியல் கட்சியினர் மக்களிடம் ஓட்டு வேட்டை நடத்தி வந்தனர். இது தி.மு.க.வுக்கு சரிவை தேடித்தரவும் தவறவில்லை. இந்த சவால்களையும் தி.மு.க. தலைவர் கருணாநிதி சாதுரியமாக சமாளித்தார் என்பதையும் மறந்துவிட முடியாது.
இந்த வழக்கில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆ.ராசாவின் மனஉறுதியை தான். வழக்கு பதியப்பட்ட நாளில் இருந்து தீர்ப்பு வரை, எப்படியும் விடுவிக்கப்பட்டு விடுவோம் என அவர் தீர்க்கமான நம்பிக்கை கொண்டு இருந்தார். எந்த இடத்திலும் அவர் தளரவில்லை. பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்வது போன்ற புன்னகையுடனே கோர்ட்டு படிகளை ஏறினார்.
இந்த வழக்கு தொடர்பான பல்வேறு உண்மைகளை விளக்கும் வகையில் தான் ஒரு புத்தகத்தை எழுதி வருவதாக ஆ.ராசா பல நாட்களாக கூறி வந்தார். இந்த நூலை எழுதி முடித்து விட்டதாகவும் தீர்ப்பு வெளிவந்தவுடன் அதனை வெளியிடுவதாகவும் கடந்த மாதம் அவர் கூறினார். தற்போது, ‘தீர்ப்பு வெளிவந்து விட்டதால், அந்த புத்தகத்தை ஜனவரி மாதத்தில் வெளியிடுகிறேன்’ என்று அவர் நேற்று மகிழ்ச்சி கொண்டாட்டங்களுக்கு இடையே தெரிவித்தார். அந்த நூலில் என்னென்ன தகவல்கள் எல்லாம் இடம்பெற்று இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இந்த தீர்ப்பு வெளியிடுவதற்கான தேதியை நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்த தினம், கோர்ட்டுக்கு வந்த சுப்பிரமணிய சாமி, வாசலில் நின்றிருந்த ஆ.ராசாவிடம், ‘உங்களை விரைவில் திகார் சிறையில் வந்து சந்திப்பேன்’ என்று சிரித்து கொண்டே கூறினார். அதற்கு ராசாவின் பதிலோ, உரத்த வெடிச்சத்தம் போன்ற ஒரு சிரிப்பு மட்டுமே. இன்றைக்கோ நிலைமை மாறிவிட்டது. தற்போது, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறார் சுப்பிரமணிய சாமி.
அரசு தரப்பில் இந்த வழக்கை நீதிமன்ற வாதங்களில் முன்வைத்த விதம் குறித்து நீதிபதி ஓ.பி.சைனி தன்னுடைய தீர்ப்பில் கடும் அதிருப்தியை பதிவு செய்து இருக்கிறார். குற்றத்தை நிரூபிக்கும் வகையில் ஒரு ஆதாரத்தை கூட அரசு தரப்பு முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தேசமே உற்றுநோக்கி எதிர்பார்த்துக்கொண்டு இருந்த 2ஜி வழக்கில் வெளியான தீர்ப்பு ஒவ்வொரு தரப்புக்கும் வெவ்வேறு தாக்கத்தை தந்து உள்ளது.
ஆனால், தி.மு.க. இதை மிகப்பெரிய வெற்றியாகவே கருதுகிறது. தன் மீது படிந்த கறை துடைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த தீர்ப்பு இனி வரும் தேர்தல்களில் தங்களுக்கு நிச்சயம் மாபெரும் வெற்றியை தேடித்தரும் என்றும் அந்த கட்சி உறுதியாக நம்புகிறது.
எப்படியென்றாலும், இந்த தீர்ப்பு மாநில மற்றும் தேசிய அரசியல் அரங்கில் புதிய திருப்பத்தை, மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அது எத்தகையதாக இருக்கும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-கிருஷ்ணகிரி ராகவன் தம்பி