‘ஒகி’ ஓய்ந்தாலும் ஓயாத துயரம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சூறையாடி சென்ற ‘ஒகி’ புயல் ஓய்ந்துவிட்டாலும், அது தந்த துயரம் இன்னமும் ஓயவில்லை. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் மாயமாகி விட்டார்கள்.

Update: 2017-12-22 09:00 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தை சூறையாடி சென்ற ‘ஒகி’ புயல் ஓய்ந்துவிட்டாலும், அது தந்த துயரம் இன்னமும் ஓயவில்லை. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் மாயமாகி விட்டார்கள். சிலர் பிணமாக கரை ஒதுங்கி இருக்கிறார்கள். புயலால் பாதிக்கப்பட்ட மீனவ, விவசாய குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஆனால் மாயமான மீனவர்களின் கதி என்ன? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பதெல்லாம் இன்னமும் தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிடும்போதெல்லாம், ‘கடற்படை கப்பல்களையும், விமானங்களையும் பயன்படுத்தி தீவிரமாக தேடி கொண்டிருக்கிறோம். விரைவில் மீட்டு விடுவோம்’ என்ற வழக்கமான பதிலையே தருகிறார்கள்.

இயற்கை பேரிடர் ஏற்படும் போதெல்லாம் மக்கள் படும் துயரங்களையும், உயிரிழப்புகளையும் தவறாமல் பட்டியலிட்டு இழப்பீடு கோருவதில் அரசு காட்டும் அக்கறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் காட்டாதது வேதனைதான்.

70 கிலோ மீட்டர் நீண்ட கடற்கரையையும், 44 மீனவ கிராமங்களையும் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘இயற்கை பேரிடர் மேலாண்மை மையம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மீனவ மக்களை சந்தித்து சென்ற பிரதமர் மோடி இதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்.

-கவிதா, உதவி பேராசிரியர், இந்து கல்லூரி, நாகர்கோவில்

மேலும் செய்திகள்