பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் நூதன போராட்டம்
சம்பளம் வழங்கக்கோரி பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் நூதன போராட்டம் நடந்தது.
புதுச்சேரி,
புதுச்சேரி பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அவர்கள் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு தூக்கு போடுவது போல கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சங்க தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முரளி ஸ்டாலின், சாதிக் பாட்ஷா, ரமேஷ், சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 14 மாதங்கள் வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், இறந்து போன தினக்கூலி ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.