பெண் மாற்றுத்திறனாளி இறந்த மறுநாளே கணவனும் தற்கொலை

குடிப்பழக்கத்தால் பெண் மாற்றுத்திறனாளி சாவுக்கு காரணமாகி விட்டதாக மனமுடைந்து மறுநாளே கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-12-21 22:24 GMT

வில்லியனூர்,

புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் ஸ்ரீதர் நகரில் வாடகை வீட்டில் வருபவர் ஸ்ரீனிவாசன் (வயது 42). பிளம்பர். இவருடைய மனைவி சாந்தி (32). இவர்களுக்கு 2 வயதில் கேசவன் என்ற ஆண் குழந்தை உள்ளது. சாந்தி மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.

ஸ்ரீனிவாசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இதுதொடர்பாக கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 17–ந்தேதி சாந்திக்கு மாற்றுத்திறனாளிக்கான அரசு உதவித்தொகை பணம் கிடைத்தது.

அந்த பணத்தை மனைவியிடம் ஸ்ரீனிவாசன் வற்புறுத்தி வாங்கி மதுகுடிக்கச் சென்றார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த சாந்தி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போதையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீனிவாசன் மனைவி இறந்ததை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை முடித்த பிறகு சாந்தியின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடந்தன.

திருமணமான 3 ஆண்டுகளே ஆன நிலையில் சாந்தி தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து தாசில்தார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் மனைவி சாவுக்கு காரணமாகி விட்டதை எண்ணி ஸ்ரீனிவாசன் மனமுடைந்தார். சாராயம் குடித்துவிட்டு அன்று இரவில் கரிக்கலாம்பாக்கம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உரிமையாளர் அங்கு வந்து இந்த வீட்டில் இருந்தால் மனைவியின் நினைவாக இருக்கும் என்று கூறி ஸ்ரீனிவாசனை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க மறுத்தார்.

இதனால் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் எழுந்த அவர் தனது வீட்டுக்கு வந்து தனது குடிப்பழக்கத்தால் மனைவி இறந்ததை நினைத்து கதறி அழுததாக தெரிகிறது. விரக்தி அடைந்த நிலையில் இருந்த ஸ்ரீனிவாசன் திடீரென்று மனைவி தூக்கில் தொங்கிய அதே மின் விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தொங்கினார். நேற்று காலை வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஸ்ரீனிவாசன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர் இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப்பழக்கத்தால் குடி கெட்ட இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்