கடன் தொல்லையால் மிளகு வியாபாரி கிணற்றில் குதித்து தற்கொலை

விராஜ்பேட்டை அருகே, கடன் தொல்லையால் மிளகு வியாபாரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-12-21 21:30 GMT

குடகு,

விராஜ்பேட்டை அருகே, கடன் தொல்லையால் மிளகு வியாபாரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடன் தொல்லை

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா கொண்டங்கேரி கிராமத்தை சேர்ந்தவர் அபுபக்கர்(வயது 60). இவர் மொத்தமாக மிளகு வாங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் வியாபாரத்திற்காக அபுபக்கர் வங்கிகள் மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார். ஆனால் அவருக்கு வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் வங்கியில் இருந்து வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடன் கொடுத்தவர்களும், கடனை திரும்ப தரும்படி கேட்டதாக தெரிகிறது. இதனால் அபுபக்கர் மனம் உடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியேறிய அபுபக்கர், அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே காலையில் அவரது குடும்பத்தினர் எழுந்து பார்த்ததும் அபுபக்கரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

அப்போது அபுபக்கர் கிணற்றில் பிணமாக மிதப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த விராஜ்பேட்டை போலீசாரும், தீயணைப்பு படைவீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இருந்து அபுபக்கரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவரின் உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. போலீசாரின் விசாரணையில், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அபுபக்கர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபுபக்கருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகளும், 4 மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்