பெங்களூருவில், ரூ.150 கோடி செலவில் 1.40 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு

பெங்களூருவில் குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரூ.150 கோடி செலவில் 1.40 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2017-12-21 21:30 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரூ.150 கோடி செலவில் 1.40 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள்

பெங்களூரு நகரில் தினமும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. சில நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இவ்வாறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

விசாரணை அடிப்படையில் போலீசார் கைது செய்தாலும், சில வழக்குகளில் சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தான் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு பெரும் உதவியாக உள்ளன. பெங்களூரு நகரில் தற்போது 5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், நகரில் நடைபெறும் குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை.

1.40 லட்சம் கேமராக்கள்

இதனால், பெங்களூரு நகரில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து பெங்களூரு மாநகர போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பெங்களூரு மாநகராட்சியின் கமி‌ஷனர் மஞ்சுநாத் பிரசாத், பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில் குமார் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின்போது நகரில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்தது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதாவது, 3 மாதங்களில் ரூ.150 கோடி செலவில் பெங்களூரு நகரில் மொத்தம் 1.40 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி, உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறுகையில், ‘பெங்களூருவில் சட்டம்–ஒழுங்கை கட்டுக்குள் வைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதால் குற்ற வழக்குளில் தொடர்புடையவர்கள் எளிதில் போலீசாரிடம் சிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், குற்றங்கள் குறையும் என நம்புகிறோம். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஒதுக்க முடிவு செய்யட்டுள்ளது‘ என்றார்.

‘பாதுகாப்பு நகரம்‘ திட்டம்

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி கமி‌ஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், ‘பெங்களூரு நகர் முழுவதையும் கண்காணிப்பு கேமரா மூலம் கவனிக்க உள்துறை விருப்புகிறது. இதனால், நகரில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலைகளில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தம் 1.40 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. உள்துறையின் ‘பாதுகாப்பு நகரம்‘ என்ற திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மற்றும் அதனை பராமரிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்ய உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்த்து கொள்ள முடியும்.‘ என்றார்.

இதுதொடர்பாக, பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில் குமார் கூறுகையில், ‘சுய ஆய்வுப்படி கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்கள் குறைவது தெரியவந்துள்ளது. குற்றங்கள் நடைபெறுவதை கட்டுப்படுத்தும் வகையிலும், குற்றவாளிகளை கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் பிடித்து கைது செய்வதற்கு வசதியாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் மாநகராட்சி நிர்வாகத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். அதில், எங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என்பன உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்‘ என்றார்.

மேலும் செய்திகள்