உரிமைகளை பெற்றுத்தர வலியுறுத்தி தஞ்சை மாவட்ட நீதிபதியிடம், அரசு ஊழியர்கள்– ஆசிரியர்கள் மனு

உரிமைகளை பெற்றுத்தர வலியுறுத்தி தஞ்சை மாவட்ட நீதிபதியிடம், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மனு அளித்தனர்.

Update: 2017-12-21 23:00 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ–ஜியோ) ஒருங்கிணைப்பாளர்கள் ரெங்கசாமி, இளையராஜா, சத்தியசீலன் ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி நக்கீரனை சந்தித்து, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்புமாறு ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அரசுத்துறைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களாகிய நாங்கள் ஜாக்டோ– ஜியோ என்ற பெயரில் கூட்டமைப்பாக இயங்கி வருகிறோம். கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அரசு வழங்க வேண்டிய நியாயமான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்காக போராடி வருகிறோம்.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அதைத்தராமல் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது. அதை பெற மக்கள் நலன் மற்றும் மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவில் அரசிடம் பல்வேறு பிரதிநிதித்துவங்கள், கோரிக்கை மனுக்கள், முறையீடுகள் போன்றவை மூலம் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

ஆனால் அரசு, எங்கள் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தி வருகிறது. எங்களின் வாழ்வாதார கோரிக்கையான ஊதிய மாற்றம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல், ஊதிய முரண்பாடுகளை களைதல் போன்ற எதை குறித்தும் கவலைப்படாமல் தொடர்ந்து கால நீட்டிப்பு செய்து வந்த சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு தள்ளப்பட்டோம் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகிய தாங்கள் எங்கள் கோரிக்கையின் பேரில் உள்ள நியாயத்தை உணர்ந்து தமிழக அரசின் பலதுறைகளில் பணிபுரியும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சட்டப்படியும், அரசியலமைப்பு சட்டப்படியும் உறுதிபடுத்தப்பட்டுள்ள உரிமைகளை பெற்றுத்தர வேண்டும். எங்களது உரிமைகள் மறுக்கப்படுமானால் நாங்கள் மீண்டும் போராட்டக்களம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே ஐகோர்ட்டு நீதிபதி எங்களுக்கான நியாயத்தை நிச்சயம் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த மனுவை அளிக்கிறோம். நாங்கள் போராட்டங்களை தேடிச்செல்லவில்லை. அதே சமயம் போராட்டங்கள் எங்கள் மீது திணிக்கப்பட்டால் நாங்கள் வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்