புதுமாப்பிள்ளை கடத்தி கொலை: மனைவி– உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை

குளச்சல் அருகே புதுமாப்பிள்ளையை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியிடம் 5 மணிநேரம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும், உறவினர் ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-12-21 22:15 GMT

குளச்சல்,

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் கனராஜ். இவருடைய மகன் டார்வின் ராஜா(வயது 25). இவருக்கும், குளச்சல் அருகே குழவிளையை சேர்ந்த ராஜசேகர் மகள் அர்சயா ராஜிலின்(22) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ராஜசேகர் குளச்சல் பஸ்நிலையத்தில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜசேகர் நிறுவனத்தின் பொறுப்பை மருமகனிடம் ஒப்படைத்தார்.

சம்பவத்தன்று காலையில் நிறுவனத்திற்கு சென்ற டார்வின் ராஜா மதியம் சாப்பிட வரவில்லை. அவரது மனைவி அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்தவர்கள் நீண்ட நேரத்திற்கு முன்பே சென்று விட்டதாக கூறினார்கள். அன்று அவர் வீடு திரும்பவில்லை. இதனால் இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்தநிலையில் வெள்ளமணல் குளக்கரையில் டார்வின் ராஜா அரிவாளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் டார்வின் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்சில் அவரது உடல் சொந்த ஊருக்கு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.

அப்போது, கருங்கல் போலீஸ் நிலையம் அருகே டார்வின் ராஜாவின் உறவினர்களும், நண்பர்களும் ஆம்புலன்சை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கொலையாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அப்புறப்படுத்தினார்கள். பின்னர், டார்வின்ராஜா உடல் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கொலையாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். டார்வின் ராஜாவின் மனைவி அர்சயா ராஜிலினை நேற்று விசாரணைக்காக போலீசார் அழைத்தனர்.

விசாரணைக்கு வந்த அவரிடம் மகளிர் போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக ராஜசேகரின் உறவினர் ஒருவரையும் பிடித்து தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்