சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மகதாயி நதிநீர் பிரச்சினையில் பா.ஜனதா தலைவர்கள் அரசியல் நாடகமாடுகிறார்கள்

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மகதாயி நதிநீர் பிரச்சினையை கையில் எடுத்து கொண்டு பா.ஜனதா தலைவர்கள் அரசியல் நாடகமாடுவதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.

Update: 2017-12-20 22:00 GMT

விஜயாப்புரா,

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மகதாயி நதிநீர் பிரச்சினையை கையில் எடுத்து கொண்டு பா.ஜனதா தலைவர்கள் அரசியல் நாடகமாடுவதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.

பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக...

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2018) தேர்தல் நடைபெற இருப்பதால், முதல்–மந்திரி சித்தராமையா ஒரு மாத கால சுற்றுப்பயணத்தை கடந்த 13–ந் தேதி பீதரில் தொடங்கினார். அவரது சுற்றுப்பயணத்தின் 8–வது நாளான நேற்று விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிஹால தொகுதியில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சித்தராமையா பேசினார். முன்னதாக அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வட கர்நாடக மக்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு மாதத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக எடியூரப்பா கூறி வருகிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம். கடந்த ஒரு ஆண்டாக எடியூரப்பா ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை?.

அரசியல் மாயாஜாலம்

இப்போது எடியூரப்பா அரசியல் மாயாஜாலம் நடத்த முயற்சி செய்கிறார். பா.ஜனதா தலைவர்கள் காலத்தை விரயம் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும்போது புதிய நாடகத்தை அரங்கேற்ற முயற்சி செய்கிறார்கள். பிரதமர் மோடி இப்போதாவது மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட கர்நாடகம், கோவா, மராட்டிய மாநிலங்களின் முதல்–மந்திரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் அதை நாங்கள் திறந்த மனதுடன் வரவேற்போம்.

இது தொடர்பாக கோவா அல்லது மராட்டிய மாநிலங்கள் கூட்டத்தை கூட்டினால் அதில் பங்கேற்க நாங்கள் தயாராக உள்ளோம். வட கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்சினை தீர வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். பிரதமர் மோடி, கோவா மற்றும் மராட்டிய மாநிலங்களின் முதல்–மந்திரிகளுக்கு பல முறை கடிதம் எழுதினேன். இதற்கு எந்த பதிலும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

ஒற்றுமையாக வாருங்கள்

கோவா முதல்–மந்திரி ஏதோ ஒரு காரணத்தை சொல்லி பேச்சுவார்த்தைக்கு வர மறுத்துவிட்டார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாநில மக்களை திசை திருப்ப பா.ஜனதா தலைவர்கள் அரசியல் நாடகமாடுகிறார்கள். லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் கோரி என்னிடம் தனித்தனியாக அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் 5 மனுக்களை வழங்கி இருக்கிறார்கள். அனைவரும் ஒற்றுமையாக வாருங்கள் என்று அவர்களிடம் நான் கூறி இருக்கிறேன்.

எனக்கு வழங்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சிறுபான்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். வரலாற்றுபூர்வமாக ஆராய்ந்து அந்த ஆணையம் அறிக்கை வழங்கும். அதன் பிறகு நாங்கள் ஒரு முடிவு எடுப்போம். சிபாரிசு செய்வது மற்றும் மத்திய அரசுக்கு அனுப்புவது என்பது வெவ்வேறானவை. எனக்கு வந்த மனுக்களை குப்பை தொட்டியிலா போட முடியும். அந்த மனுக்களை சட்டப்பூர்வமாக ஆய்வு நடத்த வேண்டும். அந்த பணியை நான் செய்கிறேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்