ரூ.20 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் 2 பேர் கைது

திருவெறும்பூர் அருகே ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் 2 பேரை நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2017-12-20 23:15 GMT
திருச்சி,

திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது 57). இவருக்கு சொந்தமாக திருவெறும்பூர் அருகே அகரம் கிராமத்தில் 1½ ஏக்கர் நிலம் இருந்தது. இதில் ரூ.20 கோடி மதிப்புள்ள 80 சென்ட் நிலத்தை கடந்த 2014-ம் ஆண்டு கணேசமூர்த்தியின் தம்பியான லால்குடி கல்லக்குடியை சேர்ந்த நடேசமூர்த்தியிடம்(54) போலி ஆவணம் தயாரித்து சிலர் விலைக்கு வாங்கினர்.

இது பற்றி அறிந்த கணேசமூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்கல்யாணிடம் கடந்த மாதம் புகார் மனு அளித்தார். இந்த மனு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி நிலஅபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சாமிநாதன், இன்ஸ்பெக்டர் அஜீம் ஆகியோர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அந்த நிலம் கணேசமூர்த்திக்கு சொந்தமானது என்பதும், அந்த நிலத்தை அவரது தம்பி நடேசமூர்த்தி மற்றும் காட்டூர் அம்மன்நகரை சேர்ந்த செண்பகராஜ்(55), திருவெறும்பூர் காட்டூரை சேர்ந்த முத்துக்கருப்பன், ஷேக்முஜிபுர்ரகுமான், மரியஆனந்தராஜ், மணிகண்டன், சீனிவாசன் ஆகிய 7 பேர் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. இதையடுத்து நடேசமூர்த்தி, செண்பகராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்