நிதிநிலையை சீரமைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் நாராயணசாமி தகவல்

புதுவையின் நிதிநிலையை சீரமைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2017-12-21 00:00 GMT

புதுச்சேரி,

புதுவையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும், நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:–

கடந்த 2007–ம் ஆண்டு வாங்கிய கடனுக்கான அசல் தொகையை அரசுதிருப்பிச் செலுத்த வேண்டிய நிலை இருப்பதால் நிதிநிலையில் சிக்கல்கள் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனாலும் எதிர்க்கட்சிகள் சொல்லும் அளவுக்கு நிதி அவசர நிலை எதுவும் ஏற்படவில்லை. இந்த பிரச்சினையை சமாளிக்கும் நிலையில் அரசு உள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலோ, திட்டங்களை செயல்படுத்துவதிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

மக்கள் பீதி அடையும் அளவுக்கு நிதிநிலை மோசமாக இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். கடந்தகால என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் விதிமுறைகளை மீறி பல்வேறு துறைகளில் நிதியை மாற்றியுள்ளனர். அதேபோல் ஏராளமான ஊழியர்களை பொதுப்பணித்துறை மற்றும் அரசுசார்பு நிறுவனங்களில் பணியமர்த்தி உள்ளனர். இதனால் பல்வேறு நிதி சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த கால அரசின் சீர்குலைவுகளை சரிசெய்ய எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுப்பணித்துறை பாக்கித்தொகை, முதியோர் பென்சனுக்கான தொகை போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு புதுச்சேரிக்கு ரூ.1,250 கோடி தரவேண்டியுள்ளது. அதில் ரூ.500 கோடியை உடனடியாக வழங்கவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். மேலும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்கு ஈட்டுத்தொகையாக ரூ.550 கோடி தருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இதுபற்றிய அனைத்து வி‌ஷயங்கள் தொடர்பாகவும் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியிடம் கூறி இருக்கிறேன். அவரும் நமக்கு சாதகமாக இருக்கிறார். மீண்டும் அவரை விரைவில் சந்தித்துப் பேச உள்ளேன். புதுவையில் உள்ள வளங்களை வைத்து நிதி ஆதாரங்களை பெருக்க நீண்டகால திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். மேலும் நிதி ஆதாரங்களை திரட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் தலைமை செயலாளர் விஜயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து உள்ளோம். அறிக்கை வந்தபின்பு சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.

இத்தகைய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி அளவுக்கு அரசு உதவி செய்து வருகிறது. புதுவையின் நிதி நிலைமையை சீரமைக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டமாட்டோம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்