புதுச்சேரி அரசிடம் இருந்து வந்த கோப்புகளுக்கு அனுமதி அளித்த விவரங்களை கவர்னர் வெளியிட்டார்
புதுவை அரசிடம் இருந்து வந்த கோப்புகளுக்கு அதற்கு அனுமதி அளித்த விவரங்களை கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ளார். அதனை இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்ட கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி தருவதில்லை என்று அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் கவர்னர் கிரண்பெடி பல்வேறு இடங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு கேள்விகள் கேட்க தொடங்கினர்.
இந்த நிலையில் புதுவை அரசிடம் இருந்து கடந்த 11–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை வந்த 14 கோப்புகளின் விவரத்தையும், அதற்கு எடுத்த நடவடிக்கைகளையும் கவர்னர் கிரண்பெடி இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் புதுவை மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்க ஜூன் மாதத்துக்கான ரூ.19 கோடியே 31 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கோப்பு கடந்த 13–ந் தேதி வந்து 15–ந் தேதி அனுமதி தரப்பட்டுள்ளது. அரசு கலைக் கல்லூரிகளில் பொருளாதார பிரிவில் 20 காலிப்பணியிடங்களை நிரப்பும் கோப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சுகாதாரத்துறையில் 20 சிறப்பு மருத்துவர் பணியிடங்கள், 17 தலைமை மருத்துவ அதிகாரிகள், 26 சீனியர் மருத்துவ அதிகாரிகள் பணியிடங்கள், 48 பொது மருத்துவ அதிகாரிகள், 3 சீனியர் பல் மருத்துவர்கள் நிரந்தரம் தொடர்பான கோப்புக்கு ஒப்புதல் தரப்பட்டு உள்ளது. மேலும் கோவில் அறங்காவலர்கள் நியமனம் உட்பட பல கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி இணைய தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
கவர்னர் மாளிகையில் நடப்பதை பொதுக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் கோப்புகள் அரசிடம் இருந்து கவர்னர் மாளிகைக்கு வருவது முதல் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரை கவர்னர் மாளிகை இணையத்தில் (https://rajnivas.py.gov.in/press.php.) பதிவு செய்ய உள்ளோம். வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகள் இந்த விவரங்கள் பதிவேற்றப்படும். இதனை பொதுமக்கள் பார்க்கலாம். மேலும் தகவல் அறிய விரும்புவோர் துறைகளை அணுகலாம். அத்துடன் கவர்னர் மாளிகையையும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதுவை ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் புதுவை மாநிலத்தில் கேபிள் டி.வி. வரி வசூலிப்பதில் முறைகேடு நடைபெற்று வருவதாக கூறி இருந்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர், அதனை கலெக்டருக்கு அனுப்பி விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.