நோய்கள் வராமல் தடுக்க உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்

நோய்கள் வராமல் தடுக்க உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2017-12-20 23:00 GMT

புதுச்சேரி,

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் சார்பில் குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் சர்க்கரை நோயை தடுக்கும் உணவுகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றின் கண்காட்சி நடந்தது. முகாமுக்கு டாக்டர் பாலாஜி தலைமை தாங்கினார். மருத்துவ அதிகாரி அஸ்வினி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமினை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஓமியோபதி, ஆயர்வேத சிகிச்சைக்கு மாறிவருகின்றனர். அலோபதி மருத்துவத்தில் பக்க விளைவுகள் இருக்கும். ஆனால் ஓமியோபதி, ஆயுர்வேதா, யுனானி மருத்துவத்தில் பக்க விளைவுகள் இருக்காது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தீட்டிய திட்டத்தின்படி ஓமியோபதிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

இதற்காக சுகாதாரத்துறையில் ஒரு பிரிவை உருவாக்கி மருத்துவமனைகளும் கட்டப்பட்டு டாக்டர்களும் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி புதுச்சேரிக்கும் ஓமியோபதி மருத்துவமனை கிடைத்தது. இங்கு பல்வேறு தரப்பினரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவை பெருமளவு உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தினாலே 90 சதவீதம் நோயை கட்டுப்படுத்திவிடலாம். உணவு கட்டுப்பாடு கொண்டவர்களுக்கு வியாதிகள் வருவது குறைவாக இருக்கும். எனவே அதை நாம் கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாத வாழ்க்கை நெறிமுறைகளையும், பழக்க வழக்கங்களையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

மேலும் செய்திகள்