பாபநாசத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்டு தம்பதி மீண்டும் கைது

பாபநாசத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்டு தம்பதியை திருப்பூர் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

Update: 2017-12-20 22:45 GMT

திருப்பூர்,

கேரளாவை சேர்ந்த மாவோயிஸ்டு தம்பதி ரூபேஸ்–சைனி. இவர்களை கோவை மாவட்ட கியூ பிரிவு போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த தம்பதி திருப்பூர் எம்.எஸ்.ஆர்.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தபோது போலி ஆவணங்கள் கொடுத்து செல்போன் சிம்கார்டு வாங்கியதாக அனுப்பர்பாளையம் போலீசார் இவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு கோர்ட்டில் நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண் மாவோயிஸ்டு சைனியை, நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ( ஜனவரி) 5–ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சைனி கூறும்போது ‘‘ எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும், விசாரணை தொடங்கப்படவில்லை’’ என்றார். இதையடுத்து சைனியை பலத்த போலீஸ் பாதுபாப்புடன் மீண்டும் கோவை சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

கோவை சிறையில் உள்ள ரூபேசை கோவை மாவட்ட கியூ பிரிவு போலீசார் வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்று இருந்ததால் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை. இதனால் சைனி மட்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்கிடையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டையை சேர்ந்த பவுதிகாபேகம் என்பவர் அங்குள்ள போலீசில் ஒரு புகார் கொடுத்து இருந்தார். அந்த புகாரில் தன்னுடைய ஆவணங்களை பயன்படுத்தி, மாவோயிஸ்டு தம்பதியான ரூபேசும், சைனியும் பாபநாசத்தில் சிம்கார்டு வாங்கி இருந்ததாக கூறியிருந்தார். இந்த புகாரை விசாரித்த போலீசார், இந்த புகார் மனுவை திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசுக்கு அனுப்பி வைத்தனர்.

அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்து, மாவோயிஸ்டு தம்பதி ரூபேஸ் மற்றும் சைனி மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்து அவர்களை மீண்டும் அவர்களை கைது செய்தனர். போலி ஆவணங்கள் கொடுத்து சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்டு தம்பதி மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்