ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு,
அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும் வழங்க வேண்டும். முறையான ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். 1–1–2016 முதல் ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்க வேண்டும். மே மாதம் கோடை விடுமுறையும், சனிக்கிழமை விடுமுறையும் அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ராதாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிமாலை, பொருளாளர் எம்.அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த அங்கன்வாடி பணியாளர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.