வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Update: 2017-12-20 22:45 GMT
சேலம்,

சேலம் ஜாகீர்ரெட்டிபட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் கடந்த மாதம் 10-ந் தேதி டைட்டல் பார்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மணியனூர் காந்தி நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 23) மற்றும் அவருடைய கூட்டாளிகள் பழனிசாமியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், வெள்ளி அரைஞாண்கொடி, ரூ.800 ஆகியவற்றை பறித்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பிரகாஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் அம்பேத்கர் தெருவை சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவரிடம் 2¼ பவுன் நகையை பறித்து கொண்டனர். மேலும் கடந்த மாதம் 12-ந் தேதி பிரகாஷ் எம்.கொல்லப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த செந்தில் என்பவரிடம் கைகெடிகாரம் மற்றும் ரூ.500 பறித்துக்கொண்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் பிரகாசை இரும்பாலை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு, பொதுமக்களின் அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் பிரகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, மாநகர துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை ஆகியோர் போலீஸ் கமிஷனர் சங்கரிடம் பரிந்துரை செய்தனர்.

இந்த பரிந்துரையை ஏற்று பிரகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர். பிரகாஷ் மீது கொலை மிரட்டல் தொடர்பான வழக்கு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்