மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2017-12-20 22:45 GMT

மதுரை,

கவர்னர் பன்வாரிலால் புரோகித் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் நேற்றுமுன்தினம் இரவு மதுரை சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால், தென்மண்டல ஐ.ஜி.சைலேஷ்குமார்யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

நேற்று காலை அவர் காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு அவரை கோவில் இணை கமி‌ஷனர் நடராஜன் மற்றும் கோவில் பட்டர்கள் பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர். பின்பு மீனாட்சி அம்மன் சன்னதிக்கு சென்று சாமி கும்பிட்டார்.

அங்கிருந்து முக்குறுணி விநாயகர் சன்னதி சென்றார். அங்கு பிரமாண்ட விநாயகர் சிலையை கண்டு பிரமித்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, சுந்தரேசுவரரை தரிசித்து விட்டு, பிரகாரங்களை வலம் வந்தார். அப்போது கவர்னருக்கு அங்குள்ள சிலைகள் மற்றும் தூண்களின் சிறப்பு குறித்து கலெக்டர் விவரித்துக் கூறினார். அதனை அவர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

அங்கு நின்று கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கவர்னர் குறித்து கேட்டனர். கவர்னர், அவர்கள் அருகில் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு நலம் விசாரித்தார்.

சாமி தரிசனம் முடிந்த பின், கவர்னருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறிய மீனாட்சி அம்மன் சிலையும், குங்கும பிரசாதமும் வழங்கப்பட்டன. அதன் பின்பு அவர் சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் காரைக்குடி புறப்பட்டுச்சென்றார்.

கவர்னர் வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்