கட்டாயப்படுத்தி பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் சம்பவம் திருமணமான 11 நாட்களில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்?

கட்டாயப்படுத்தி பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் திருமணமான 11 நாட்களில் புதுப்பெண், கணவர், மாமனார், மாமியாருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு தப்பி சென்றார்.

Update: 2017-12-19 21:00 GMT

ஹாசன்,

கட்டாயப்படுத்தி பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் திருமணமான 11 நாட்களில் புதுப்பெண், கணவர், மாமனார், மாமியாருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு தப்பி சென்றார். அவர் காதலனுடன் ஓட்டம் பிடித்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதல்

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா ஹானபாலு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ஸ்ரீலாவதி. இந்த தம்பதியின் மூத்தமகள் குசுமா என்கிற சுவேதா. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் 2 பேருக்கும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் குசுமாவின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குசுமாவின் பெற்றோர், அவரை கட்டாயப்படுத்தி வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் வேறொருவரை திருமணம் செய்ய குசுமாவுக்கு விருப்பம் இல்லை.

உணவில் தூக்க மாத்திரை கலந்து...

ஆனாலும் குசுமாவின் பெற்றோர், கொத்தமனே கிராமத்தை சேர்ந்த மோகன்தாஸ் என்பவருக்கு குசுமாவை கட்டாயப்படுத்தி கடந்த 6–ந் தேதி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணத்தின் பின்னர், குசுமா மோகன்தாசின் குடும்பத்தினரிடம் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி இரவு குசுமா, தனது கணவர் மோகன்தாஸ் மற்றும் அவரது பெற்றோருக்கு உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து உள்ளார். அந்த உணவை சாப்பிட்ட அவர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குசுமா அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

காதலனுடன் ஓட்டம்?

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மோகன்தாசும், அவரது பெற்றோரும் எழுந்து பார்த்தனர். அப்போது குசுமா வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்தாஸ், குசுமா மாயமாகி விட்டதாக சக்லேஷ்புரா போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது மோகன்தாசுக்கு, குசுமாவை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததும், இதனால் மோகன்தாசுக்கும், அவரது பெற்றோருக்கும் குசுமா உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

தப்பி சென்ற குசுமா, அவரது காதலனுடன் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஹானபாலு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்