பல்லடம் அருகே பயங்கர விபத்து: கன்டெய்னர் லாரி–கார் நேருக்கு நேர் மோதல்;4 பேர் பலி
பல்லடம் அருகே நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் லாரியும்–காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அண்ணன்–தம்பி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
பொங்கலூர்,
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு, வி.எஸ்.ஏ. நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மகன்கள் கார்த்திக் (27), மாணிக்கராஜ்(23). இந்த நிலையில் கார்த்திக் நேற்று முன்தினம் புதிதாக ஒரு கார் வாங்கினார். இந்த காரில் பொருத்துவதற்கான உதிரி பாகங்கள் வாங்க வேண்டியது இருந்தது. எனவே, அதற்காக கோவைக்கு செல்ல கார்த்திக் முடிவு செய்தார்.
அப்போது அவருடன் சகோதரர் மாணிக்கராஜ், திருப்பூர் தாராபுரம் ரோடு, புதூர் பிரிவை சேர்ந்த வீராச்சாமி என்பவரது மகன் சரவணகுமார் (31), காங்கேயம் ரோடு குன்னாங்கல்காடு ரோஸ்கான் என்பவரது மகன் அஜ்மீர்கான்(20), அதே பகுதியை சேர்ந்த சிராஜ் என்பவரது மகன் முகமது மைதீன்(23), ராக்கியாபாளையம் பிரிவு வி.எஸ்.ஏ.நகர் இஸ்மாயில் என்பவரது மகன் முகமது உசேன்(21) ஆகியோரும் சென்றனர். இவர்கள் அனைவரும் திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
அதன்படி கார்த்திக் உள்பட 6 பேரும் நேற்று முன்தினம் புதிய காரில் கோவைக்கு சென்றனர். அங்கு உதிரி பாகங்களை வாங்கி விட்டு, பல்லடம் வழியாக திருப்பூருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். காரை முகமது உசேன் ஓட்டி வந்தார். இந்த கார், இரவு 11.45 மணி அளவில் பல்லடம், லட்சுமி மில்லை அடுத்து தனியார் என்ஜினீயரிங் தொழிற்சாலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் காரில் இருந்த அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்ததும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றனர். மேலும், இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார் பொதுமக்களின் உதவியுடன் காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் கார்த்திக், மாணிக்கராஜ், சரவணகுமார் மற்றும் அஜ்மீர்கான் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முகமது உசேன் மற்றும் முகமது மைதீன் ஆகியோர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர் முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அவர்கள்சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் கோவை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்கு உள்ளான கார் மற்றும் கன்டெய்னர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
இந்த விபத்தில் பலியான கார்த்திக் மற்றும் சரவணகுமாருக்கு திருமணம் ஆகியுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்–தம்பிகளான கார்த்திக் மற்றும் மாணிக்கராஜ் உள்பட நண்பர்கள் 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து நடந்து 4 பேர் பலியான இடத்தில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடம் அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடம் என்பதால் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் பேரிகார்டுகள் மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.