ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது 29-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. 29-ந் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படு கிறது.

Update: 2017-12-19 22:45 GMT
ஸ்ரீரங்கம்.

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அவற்றுள் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா தொடங்கியது.

அப்போது காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்தின் முதல் நாளான நேற்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

இதேபோல பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (28-ந் தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

29-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நம்பெருமாள் அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்கிறார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 30, 31 மற்றும் ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும். 4-ந் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் திறந்திருக்கும். 5-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.

சொர்க்கவாசல் திறப்பு தினமான 29-ந் தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. அதன்பின்னர் ராப்பத்து 7-ம் திருநாளான ஜனவரி 4-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8-ம் திருவிழாவான 5-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 10-ம் நாளான 7-ந் தேதி தீர்த்தவாரியும், 8-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்