அடிப்படை வசதிகள் கேட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

அடிப்படை வசதிகள் கேட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி மாணவ-மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-12-19 22:45 GMT
ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி உள்ளது. இங்கு ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, மணமேல்குடி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் குடிநீர், மின்சாரவசதி போதுமானதாக இல்லை. மேலும் கழிப்பறை சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு நேற்று மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு உள்ள ஆவுடையார்கோவில்-அறந்தாங்கி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் இந்த திடீர் சாலைமறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்