அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு

பெரம்பலூரில், அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-12-19 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள ஈ.வெ.ரா. நகரை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 38). இவர், துறைமங்கலம் பகுதியிலுள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் தகவல் மேலாளராக (டேட்டா மேனேஜர்) பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி சுகநந்தினி (33). இவர், திருச்சியிலுள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு தங்களது பெண் குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் தனது குழந்தையை அழைத்து கொண்டு கங்காதரன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகைகள், 2 வெள்ளி கொலுசுகள், ரூ.2,800 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

மேலும் கதவு, பீரோவை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் வீட்டிலேயே போட்டு விட்டு சென்றிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கங்காதரன் வீடு தனியாக இருந்ததால் அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்