போதிய அளவு போலீசார் இல்லாததால் பாம்பன் ரோடு பாலத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி

போதிய அளவு போலீசார் இல்லாததால் கடந்த ஒரு வாரமாக பாம்பன் ரோடு பாலத்தில் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Update: 2017-12-19 22:15 GMT

ராமேசுவரம்,

சபரிமலை சீசனை யொட்டி ராமேசுவரம் கோவிலுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். மேலும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இவர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் போதும், திரும்பி செல்லும் போதும் கடலில் உள்ள பாம்பன் ரோடு பாலம், ரெயில் பாலத்தையும் பார்க்கும் ஆர்வத்தில் பாம்பன் ரோடு பாலத்தில் வாகனங்களை வரிசையாக நிறுத்தி விடுகின்றனர்.

இந்த ரோடு பாலத்தில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க, நெடுஞ்சாலைதுறை போலீசார் 3 பேரும், பாம்பன் காவல் நிலைய போலீசார் 2 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வாகன ஓட்டிகள் ரோடு பாலத்தில் போலீசார் இல்லாத இடங்களை பார்த்து குறிப்பாக பாலத்தின் 2 நுழைவு பகுதிகளிலும் வரிசையாக நிறுத்த தொடங்கி விடுகின்றனர்.

இதனால் பாதுகாப்பு பணி போலீசார், பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்த முடியாமல், பாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பாம்பன் ரோடு பாலத்தில் பகல் நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

பாலத்தின் மைய பகுதியில் ஒரே நேரத்தில் அதிகமான வாகனங்களை நிறுத்தக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளது. மேலும் பாலத்தில் வாகனங்களை நிறுத்தினால் ரூ.500 அபராதம் என்று காவல்துறையால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது வெறும் பெயரளவில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தொடர்ந்து பாலத்தில் வாகனங்களை வழக்கம் போல் நிறுத்தி வருகின்றனர்.

எனவே ரோடு பாலத்தின் பாதுகாப்பு கருதியும், அய்யப்ப பக்தர்கள் சீசன் முடியும் வரையிலும் பாம்பன் ரோடு பாலத்தில் 10–க்கும் மேற்பட்ட போலீசாரை நிறுத்தி போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும், குறிப்பாக பாலத்தின் மைய பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க மாவட்ட காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்