காளையார்கோவில் அருகே தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் வாலிபர் கைது
காளையார்கோவில் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி(வயது 55). இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 14–ந்தேதி கொல்லங்குடியில் இருந்து முத்தூருக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் மது அருந்திக்கொண்டிருந்த கல்லலை அடுத்த அரியகுறிச்சியை சேர்ந்த அறிவுக்கண்ணன்(28) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அறிவுக்கண்ணன், விறகு கட்டையால் கணபதியை அடித்து கொலை செய்துவிட்டு, அவரது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றார். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அறிவுக்கண்ணனை தேடி வந்தனர். இந்தநிலையில் கல்லல் பகுதியில் பதுங்கியிருந்த அறிவுக்கண்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.