புயலுக்கு பின் மீன்பிடிக்க சென்ற போது கடலில் மாயமான 3 மீனவர்களை தேடும் பணி தீவிரம்

குளச்சலில் இருந்து புயலுக்கு பின் மீன்பிடிக்க சென்ற போது, கடலில் மாயமான 3 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2017-12-19 23:00 GMT
குளச்சல்,

ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கடலில் மீன்பிடிக்க சென்ற பல மீனவர்கள் மாயமானார்கள். அவர்களில் பலரது கதி என்னவென்று தெரியாமல் உள்ளது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

புயல் தாக்குதலுக்கு பின் குமரி மாவட்ட மீனவர்கள் கடந்த 2 வாரங்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். தற்போது, கன்னியாகுமரி, குளச்சல் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

அதன்படி, குளச்சல் பகுதியை சேர்ந்த சகோரியா பிச்சை (வயது 53), நிஜல் என்கிற சிம்சன் ஜோஸ் (39) மற்றும் அந்தோணி அடிமை(60) ஆகியோர் மீன்பிடிப்பதற்காக குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு பைபர் படகில் கடந்த 17–ந் தேதி கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்றுமுன்தினம் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால், 3 மீனவர்களும் கரைதிரும்பவில்லை.

இதைதொடர்ந்து குளச்சல் கடலோர காவல் படையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாயமான 3 பேர் குறித்து,  ஆழ்கடலில் புயல் மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் கடலோர பாதுகாப்பு படை  அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடியில் இருந்து கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மூலம் மாயமான 3 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்