குமரியை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் பிரதமர் மோடியிடம், விவசாயிகள் கோரிக்கை

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2017-12-19 23:15 GMT

நாகர்கோவில்,

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை கன்னியாகுமரியில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது குமரி மாவட்ட பாசன சங்கத்தலைவர் வக்கீல் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ், தாணுப்பிள்ளை, செண்பகசேகர பிள்ளை, முருகேசபிள்ளை, கருங்கல் ஜார்ஜ், நாகராஜன், வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்த மகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.விஜயராகவன் உள்பட 32 பேரை பிரதமர் மோடி சந்தித்து புயல் சேத விவரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த சந்திப்பின்போது விவசாயிகள் தரப்பில் பிரதமர் மோடியிடம் அளித்த கோரிக்கை விவரங்கள் வருமாறு:–

ஒகி புயலால் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். இறந்த விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விவசாயிகளின் விவசாய நகைக்கடன், விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கான நிவாரணத்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்.

குஜராத்தைப் போன்று குமரி மாவட்டத்தில் மழை காலங்களில் வீணாகச் செல்லும் தண்ணீரை தேக்க ஏதுவாக தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் வேளாண்மைக்கல்லூரி அமைக்க வேண்டும். விவசாயம் பாதிக்கும் வகையில் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்க புத்தன் அணையில் இருந்து தண்ணீர் எடுக்க முயற்சிக்கும் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்