சாலை மறியலில் ஈடுபட்ட 41 பேர் கைது

கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, நெல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்த 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-18 22:30 GMT

நெல்லை,

தமிழ்ப்புலிகள் அமைப்பினர் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று திரண்டனர். அங்கு அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

இந்த போராட்டத்துக்கு தமிழ்ப்புலிகள் அமைப்பின் நெல்லை மாவட்ட செயலாளர் தமிழ் வளவன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் மந்திரம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமி‌ஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி, வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மேலும் செய்திகள்