கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா: அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அதிகாரிகள் மெத்தனம்

ஏரிக்குப்பம் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதாக உதவி கலெக்டரிடம் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2017-12-18 22:30 GMT
கண்ணமங்கலம்,

சந்தவாசல் அருகே ஏரிக்குப்பம் கிராமத்தில் யந்திர சனீஸ்வரபகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

இந்த கோவிலுக்கு திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் சென்று பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

அப்போது உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் காணிக்கை பெற நிரந்தர உண்டியல்கள் 3-ம், தற்காலிக உண்டியல்கள் 6-ம் வைக்கப்படும் என்றார்.

அப்போது அங்கிருந்த பக்தர்கள், இங்கு எவ்வித வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர் என்று புகார் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், குறிப்பாக கோவிலைச் சுற்றி அடிப்படை சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை. பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகள் இல்லை. குளம் அருகே பெண்கள் உடை மாற்ற பாதுகாப்பு இல்லாத சிறிய அறை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் உண்டியல் காணிக்கை பெறும் இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள், அதனை தங்கள் கோவில் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து வங்கிகளிடம் சலுகை பெறுகின்றனர்.

ஆனால் கோவில் அமைந்துள்ள கிராமத்திற்கு எவ்வித வசதிகளும் செய்து தருவதில்லை. இந்த ஊரில் வசிக்கும் பொதுமக்களையும், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளையும் கோவில் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

இந்த கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்தது இந்த கிராம பொதுமக்கள். ஆனால் அவர்களுக்கு எந்தவித வசதிகளும் அளிக்காமல் கோவில் வருமானம் முழுவதும் அரசு கஜானாவில் சேர்ப்பதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரமாக உள்ளது. எனவே கிராம மக்களே கோவில் நிர்வாகம் செய்தால், கோவில் வருமானம் மூலம் அடிப்படை வசதிகள் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பக்தர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்