கருவேப்பிலங்குறிச்சி அருகே பச்சைவாழியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

கருவேப்பிலங்குறிச்சி அருகே பச்சைவாழியம்மன் கோவில் உண்டியலை மர்மநபர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2017-12-18 22:00 GMT

கம்மாபுரம்,

கருவேப்பிலங்குறிச்சி அருகே பச்சைவாழியம்மன் கோவில் உண்டியலை மர்மநபர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 2–வது முறையாக கைவரிசை காட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கருவேப்பிலங்குறிச்சி அருகே சி.கீரனூரில் பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக அதேபகுதியை சேர்ந்த முருகன் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் பூசாரி முருகன், கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

பின்னர் நேற்று காலையில் பூஜை செய்வதற்காக அவர், கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து முருகன், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவில் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது பற்றி தெரியவில்லை.

ஏற்கனவே கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இதே கோவிலில் மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். தற்போது 20 நாட்களுக்கு பிறகு அதே கோவிலில் மீண்டும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்