என்.சி.சி. கேண்டீனை மூடுவதற்கு முன்னாள் ராணுவத்தினர் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முன்னாள் ராணுவத்தினர், அவர்களின் குடும்பத்தினர் பலர் திரண்டு வந்தனர்.

Update: 2017-12-18 22:15 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முன்னாள் ராணுவத்தினர், அவர்களின் குடும்பத்தினர் பலர் திரண்டு வந்தனர். பின்னர் திண்டுக்கல் அண்ணாநகரில் இருக்கும் என்.சி.சி.கேண்டீனை மூடுவதை எதிர்த்து, தேசியக்கொடியுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு திண்டுக்கல் மாவட்ட முப்படை முன்னாள் வீரர்கள் மற்றும் வீரமங்கையர் நலச்சங்க தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சங்கத் தலைவர் கூறுகையில், மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் முன்னாள் படைவீரர்கள் இருக்கிறோம். திண்டுக்கல் அண்ணாநகர் என்.சி.சி. கேண்டீனும், கொட்டப்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டீனும் உள்ளது. இதில் கொட்டப்பட்டி கேண்டீனில் 3 ஆயிரம் பேரும், அண்ணாநகர் கேண்டீனில் ஆயிரம் பேரும் பொருட்களை வாங்கி வருகிறோம். அண்ணாநகரில் என்.சி.சி. கேண்டீன் அமைவதற்கு முன்னாள் படைவீரர்கள் அனைவரும் நிதி கொடுத்து இருக்கிறோம். அதன் பின்னர் தான் கேண்டீன் அமைக்கப்பட்டது. எங்களுக்கு மாதந்தோறும் ரூ.5,500–க்கு பொருட்கள் தரவேண்டும். ஆனால், ரூ.1,500–க்கு தான் பொருட்களை தருகின்றனர். இந்த நிலையில் அண்ணாநகரில் உள்ள கேண்டீனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைவரும் கொட்டப்பட்டி கேண்டீனுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஒரு பொருள் வாங்குவதற்கு ஒரு நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்படும். மேலும் கொட்டப்பட்டிக்கு முறையான பஸ் வசதி இல்லை. எனவே, திண்டுக்கல் அண்ணாநகரில் இருக்கும் கேண்டீனை மூடக்கூடாது. மாதந்தோறும் ரூ.5,500–க்கு பொருட்கள் வழங்க வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்