மாதவரத்தில் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
சென்னையை அடுத்த மாதவரத்தில் உள்ள உடையார் தோட்டம், மாதவரம் பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகர், திடீர் நகர், தபால்பெட்டி, மாதவரம் பால்பண்ணை, அசிசி நகர் உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு மாதவரத்தில் உள்ள சென்னை குடிநீர் வாரிய அலுவலகம்
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரத்தில் உள்ள உடையார் தோட்டம், மாதவரம் பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகர், திடீர் நகர், தபால்பெட்டி, மாதவரம் பால்பண்ணை, அசிசி நகர் உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு மாதவரத்தில் உள்ள சென்னை குடிநீர் வாரிய அலுவலகம் சார்பில் குடிநீர் வழங்கப்படுகிறது.
இதற்காக ஆழ்துளை கிணறுகளில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு, 70–க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யாமல் பாசி படிந்து உள்ளன. இதனால் குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. புழுக்களும் வருவதால் அந்த தண்ணீரை குடிக்க முடியவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
சில இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டிகளில் மூடிகள் இல்லை. இதனால் காக்கைகள் குடிநீர் தொட்டியின் உள்ளே எச்சம் போட்டு சென்று விடுகின்றன. அத்துடன் காக்கைகள் இரைக்காக எடுத்து வரும் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளும் குடிநீர் தொட்டியில் விழுந்து விடுகின்றன. காற்று பலமாக அடிக்கும் போது தூசிகளும் குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரில் கலந்து விடுகிறது. இதனால் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்து, மூடிகள் போடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.