கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேச்சு
எடியூரப்பாவின் மாற்றத்திற்கான பயணம் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டும் என்றும், கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்றும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மாற்றத்திற்கான பயணத்தை தொடங்கியுள்ளார். இதுவரை 16 மாவட்டங்களில் 112 தொகுதிகளுக்கு இந்த பயணம் சென்றுள்ளது. 6,128 கிலோ மீட்டர் தூரம் எடியூரப்பா பயணித்து உள்ளார். கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எடியூரப்பாவின் இந்த மாற்றத்திற்கான பயணம் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டும்.
காங்கிரஸ் அரசின் ஊழல்களால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். பா.ஜனதா வெற்றி பெற்றால் மோடியின் ஆணைப்படி ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும். ஊழல்கள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும். நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் ஊழல் அதிகமாக நடக்கிறது.இந்த மாநிலத்தில் அரசின் அலட்சிய போக்கால் 840 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கர்நாடகத்தில் தினமும் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆட்சியில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் இதை மக்கள் தடுக்க வேண்டும். பா.ஜனதா வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தை நடத்தும். மக்களுக்கான ஆட்சியை நாங்கள் நடத்துவோம். கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
இந்த அரசு திட்டமிட்டே லோக் அயுக்தாவின் அதிகாரத்தை பறித்துவிட்டது. அதற்கு பதிலாக அரசின் கீழ் செயல்படும் ஊழல் தடுப்பு படையை தொடங்கியது. ஊழலுக்கு எதிராக போராடும் எந்த ஒரு அரசுக்கும் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. மத்தியில் மோடி ஆட்சி அமைந்த பிறகு ஊழலே நடைபெறவில்லை. மத்திய அரசுக்கு எதிராக ஒரு ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை.கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கற்பழிப்பு மற்றும் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் தொல்லைகள் பெங்களூருவில் அதிகரித்துவிட்டன. இதை விட அதிக மக்கள்தொகை கொண்ட மும்பையில் இத்தகைய சம்பவங்கள் குறைந்துள்ளன. கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.