மடிப்பாக்கம் ஏரி தண்ணீர் குடியிருப்புகளில் புகும் அபாயம்
கால்வாய் சீரமைக்கப்படாததால் மடிப்பாக்கம் ஏரி தண்ணீர் குடியிருப்புகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த மூவரசம்பட்டு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், மேடவாக்கம் போன்ற பகுதிகளில் மழைக்காலங்களில் வரும் மழைநீர் கீழ்கட்டளை சபரி சாலை வழியாக மடிப்பாக்கம் ஏரிக்கு வந்து சேரும். இந்த ஏரி சுமார் 62 ஏக்கர் நிலத்தில் உள்ளது. ஏரியை சுற்றி அய்யப்ப நகர், கார்த்திகேயபுரம் உள்பட 10–க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.
இந்த ஏரிக்கு கீழ்கட்டளை பகுதியில் உள்ள கால்வாய் வழியாக தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியின் கிழக்கு திசையில் ஒரு மதகு மற்றும் கலங்கல் இருந்தது. ஏரி நிரம்பினால் இந்த மதகு மற்றும் கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு செல்லும்.
ஆனால் மடிப்பாக்கத்தில் விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறிவிட்டதால் அந்த மதகு அடைக்கப்பட்டு, கலங்கல் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஏரி முழுமையாக நிரம்பினால் வெளியேற மதகு மற்றும் கலங்கல் எதுவுமில்லை. அது பல ஆண்டுகளுக்கு முன்பே மாயமாகி விட்டது.
கடந்த 2015–ம் ஆண்டு பெய்த கனமழையால் மடிப்பாக்கம், பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதன் பிறகும் தற்போது வரை நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. மதகு மற்றும் கலங்கல் இல்லாததால் நீர்வரத்து கால்வாய் மூலமே தண்ணீர் வெளியேற வேண்டிய நிலை உள்ளது.
மடிப்பாக்கம் ஏரியின் ஆழம் சுமார் 18 அடி ஆகும். தற்போது ஏரியில் 15 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரியின் கிழக்கு, தெற்கு பகுதியில் கரை உயர்த்தப்பட்டு பனை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கு திசையில் உள்ள அய்யப்ப நகர் மற்ற பகுதிகளை விட 2 அடி உயரம் குறைவாக உள்ளது. வருங்காலங்களில் கனமழை பெய்து ஏரி நிரம்பினால் சீரமைக்கப்படாத கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேறாமல் குடியிருப்புகளில் புகுந்து விடும் அபாயம் இருப்பதாக இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
எனவே கோவிலம்பாக்கம் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு தண்ணீர் வெளியேறும் வகையில் மதகு அமைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சென்னை மாநகராட்சி, பல்லாவரம் நகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.