தாய்– மகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
பெருந்துறை அருகே தாய்– மகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
பெருந்துறை,
பெருந்துறை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செல்போனில் அழைப்பு வந்து உள்ளது. உடனே அவர் அந்த அழைப்பை எடுத்து பேசி உள்ளார். அப்போது அந்த அழைப்பில் பேசிய ஆண் நபர், பெருந்துறை பெண்ணிடம் ஆபாசமாக பேசினார். உடனே செல்போன் தொடர்பை அந்த பெண் துண்டித்து விட்டார். பின்னர் அதே எண்ணில் இருந்து மறுநாள் அழைப்பு வந்து உள்ளது. அந்த அழைப்பை பெண்ணின் மகள் எடுத்தார். அவரிடமும் அந்த நபர் ஆபாசமாக பேசினார். இதேபோல் தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த பெண், தன் கணவரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து செல்போனில் ஆபாசமாக பேசி மன உளைச்சலை கொடுக்கும் நபரை கையும் களவுமாக பிடிக்க அந்த பெண்ணின் கணவர் முடிவு செய்தார். இதையடுத்து அந்த நபரை செல்போனில் நைசாக பேசி பெருந்துறைக்கு நேற்று வர செய்தனர். நேற்று பெருந்துறைக்கு வந்த அந்த நபரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெண்ணின் கணவர் பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அந்த நபர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜேஷ் (வயது 33) என்பதும், கூலித்தொழிலாளியான இவர் அடிக்கடி செல்போனில் பெருந்துறையை சேர்ந்த பெண் மற்றும் அவருடைய மகளுக்கு செல்போனில் ஆபாசமாக பேசி மன உளைச்சல் கொடுத்ததும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜேசை போலீசார் கைது செய்தனர்.