கண்மாயில் கிடந்த சிவலிங்கம் சிலை போலீசார் மீட்டு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்

ஓட்டப்பிடாரம் அருகே கண்மாயில் கிடந்த சிவலிங்கம் சிலையை போலீசார் மீட்டு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2017-12-17 23:00 GMT
ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் இருந்து தட்டப்பாறை செல்லும் ரோட்டில் கல்லூரணி என்னும் கண்மாய் உள்ளது.

இந்த கண்மாய் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. கண்மாயின் நடுப்பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதனை அந்த பகுதியில் சென்ற மக்கள் பார்த்தனர். அவர்கள் சந்தேகத்தின் பேரில் புதியம்புத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அந்த மூட்டையில், 1½ அடி உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட சிவலிங்கம் கல்சிலையும், 20 கிலோ எடை கொண்ட பீடமும் இருந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சிலையை கைப்பற்றினர். அந்த சிலையை ஏதேனும் கோவிலில் இருந்து திருடி கொண்டு வந்து பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதன்பிறகு போலீசார் சிலையை ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராயரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்