கன்னியாகுமரிக்கு நாளை மோடி வருகை: புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களிடம் குறைகளை கேட்கிறார்

கன்னியாகுமரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வரும் பிரதமர் நரேந்திரமோடி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்கிறார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-12-17 23:00 GMT

நாகர்கோவில்,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி 19–ந் தேதி (அதாவது நாளை) குமரி மாவட்டம் வருகிறார். பிரதமர் வருகையையொட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மீனவ மக்களை நரேந்திரமோடி நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று மீனவர்கள் விருப்பப்படுகிறார்கள். இதே போல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும் பிரதமர் தங்கள் பகுதிக்கும் வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். நரேந்திரமோடியும் மீனவர்கள் மற்றும் விவசாயிகளை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று சந்திக்க விரும்புகிறார்.

ஆனால் பிரதமர் ராணுவ ஹெலிகாப்டரில் வருவதால் அந்த ஹெலிகாப்டர்களை நிறுத்தும் வசதி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இல்லை. இதுதொடர்பாக ஆய்வும் நடத்தப்பட்டு விட்டது. ராணுவ ஹெலிகாப்டர்களை நிறுத்தும் வசதி கன்னியாகுமரியிலும், நாகர்கோவிலிலும் மட்டுமே இருக்கிறது. எனவே பாதுகாப்பு கருதி பிரதமர் நரேந்திரமோடி பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களை கன்னியாகுமரியில் சந்தித்து குறைகளை கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் பிரதமரிடம் தங்களது குறைகளை கூறலாம். மேலும் அவர்களை உள்துறை அமைச்சரை சந்திக்க டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் தயாராக உள்ளேன்.

‘ஒகி‘ புயல் பாதிப்பு தொடர்பாக மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி கருத்து கேட்க உள்ளார். பலரது கருத்துகளை கேட்ட பிறகு குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கலாமா? என்று பிரதமர் முடிவு எடுப்பார். பிரதமரின் வருகை குமரி மாவட்டத்தில் தற்போதைய பாதிப்புகளை தீர்க்கக் கூடிய வகையில் மட்டும் இல்லாமல் பிற்காலத்தில் புயல் வருவதற்கு முன்னே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.

பிரதமர் வருகையை வைத்து எந்த விதமான அரசியலும் செய்ய இயலாது. பிரதமர் வருவதால் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் குமரி மாவட்டம் வர வாய்ப்புகள் உள்ளன.

ஒகி புயலில் சிக்கி காணாமல் போயுள்ள மீனவர்களின் விவரங்கள் என்னிடம் உள்ளது. காணாமல் போன மீனவர்கள் அனைவரும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் தான் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை இதுவரை சொல்லவில்லை.

மாயமாகி உள்ள மீனவர்களை தேடும் பணியில் சின்னத்துறையை சேர்ந்த 5 பேரும், தூத்தூரை சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 7 மீனவர்கள் கப்பற்படை அதிகாரிகளுடன் சேர்ந்து ஈடுபட்டனர். இவர்கள் சென்ற பெரிய கப்பல் ஆயிரம் கடல் மைல் தொலைவு வரை சென்று தேடியதாக மீனவர்களே தெரிவித்து உள்ளனர். காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். மீனவர்கள் சென்ற படகுகள் இன்னும் பிற மாநிலங்களில் இருக்கின்றன. அவற்றை கொண்டு வருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பியான் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 8 ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி இருக்கிறேன்.

குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைப்பதற்காக மத்திய குழுவினர் 4 இடங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் தான் துறைமுகத்தை இனயத்தில் அமைத்தால் சரியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று சொல்வதால் வேறு இடத்தில் துறைமுகம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. துறைமுகம் இனயத்தில் அமையாமல் வேறு பகுதியில் அமைக்கப்படுமேயானால் துறைமுகத்தை இழந்துவிட்டோமே என்று 10 ஆண்டுகளுக்கு பிறகு இனயம் மக்கள் வருத்தப்படுவார்கள்.

இனயம் துறைமுகம் அமைக்கப்பட்டு இருந்தால் புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், போலீஸ் சூப்பிரண்டு துரை ஆகியோருடன் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹெலிகாப்டர் தளம் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி தங்கும் அரசு விருந்தினர் மாளிகை ஆகியவற்றையும் பார்வையிட்டார். ஆய்வின் போது பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது.

மேலும் செய்திகள்