கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்களும்.. குழப்பங்களும்..

குடும்பம் என்பது எல்லா வயதினரையும் கொண்ட ஒரு அமைப்பு. அதில் உள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது ஒரு கலை. அதை வசப்படுத்தி செயல்படுத்த சிலரால் மட்டுமே முடிகிறது.

Update: 2017-12-17 08:03 GMT
குடும்பம் என்பது எல்லா வயதினரையும் கொண்ட ஒரு அமைப்பு. அதில் உள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது ஒரு கலை. அதை வசப்படுத்தி செயல்படுத்த சிலரால் மட்டுமே முடிகிறது. இன்று, நகர்ப்புறத்தில் வசிக்கும் இளம் தம்பதிகள், குழந்தை பிறந்ததுமே, அதனை பராமரிக்க பெரியவர்கள் தங்களுடன் இருந்தால் நல்லது என நினைக்கிறார்கள். ஆனால் பெரியவர்களை அழைத்து வந்த பிறகு, அவர்களால் புதிய தொல்லைகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.

இப்போது கூட்டுக் குடும்பங்கள் கலைந்து கொண்டிருப்பதற்கு இளையவர்களின் விருப்பமின்மை மட்டும் காரணமல்ல. அங்கே குழப்பத்தை ஏற்படுத்தும் பெரியவர் களின் குடைச்சலும் ஒரு முக்கியக் காரணம்தான். அவர்களுக்கு தாங்கள்தான் குடும்பத்தில் மூத்தவர்கள், தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் இருந்துகொண்டிருக்கிறது. தாங்கள் அனுபவஸ்தர்கள் என்பதால் தாங்கள் சொல்வதை மகனும், மருமகளும் தட்டாமல் கேட்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஒரு சில விஷயங்களை தானும் விட்டுக்கொடுத்து அனுசரித்து போகவேண்டும் என்ற எண்ணம் அவர் களுக்கு அவ்வளவு எளிதாக வருவதில்லை. தான் செய்ததில் தவறு இருந்தாலும் சிறியவர்களான மருமகள், மகன் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்கள் கவுரவம், அந்தஸ்து என்று எதையாவது கூறிக்கொண்டு அதிலிருந்து இறங்கி வராமல் பிடிவாதம் காட்டுவார்கள். எல்லோரும் அப்படியில்லை என்றாலும், பெரும்பான்மை பிரச்சினைகளின் பின்னணியில் இந்த வறட்டுக் கவுரவம் இருந்துகொண்டிருக்கிறது.

மருமகள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு வேலைக்கும் செல்பவராக இருந்தால், சமையல் பணியில் மாமியாரின் உதவி மிக அவசியமானதாக இருக்கும். வீட்டுவேலைகளையும் அவர் பங்கிட்டுக் கொள்ளவேண்டிய திருக்கும். அப்படிப்பட்ட சூழலில், ‘நான் ஏன் கடைக்குப்போக வேண்டும்? பால் வாங்க வேண்டும்?, ஸ்கூலுக்குப் போய் பிள்ளைகளை அழைத்து வர வேண்டும்? எனது கடமைகள் எல்லாம் முடிந்துவிட்டது.. இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது’ என்றெல்லாம் வியாக்கியானம் பேசக்கூடாது.

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறிய மனஸ்தாபங்களை மனதில் வைத்துக் கொண்டு மருமகளை மட்டம் தட்டி, மகனிடம் மாட்டிவிடும் வேலையிலும் ஈடுபடக்கூடாது. மரு மகள் வசதிக்கேற்ப உடையணிவதைப் பற்றி மற்றவரிடம் விமர்சிக்கக் கூடாது.

சமையலை எடுத்துக்கொண்டால் தனிக்குடும்பத்திற்கும்- கூட்டுக் குடும்பத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தனிக்குடித்தனத்தில் சமைக்க முடியாவிட்டால் ஒரு வேளைக்கு வெளியே சாப்பிடலாம் என்று முடிவு செய்துவிடலாம். ஆனால் கூட்டுக்குடும்பமாக இருக்கும்போது அப்படி முடியாது. சமைப்பது பெரிய வேலையாகிவிடும். அது மட்டுமல்ல தனிக்குடித்தனத்தினர் தங்களுக்கு பிடித்ததுபோல் சிம்பிளாக சமைத்து தேவையை பூர்த்தி செய்துகொள்வார்கள். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் முதியோர்களுக்கு அவர் களது உடலுக்கும், மனதுக்கும் பிடித்த உணவு தேவையாகிறது.

அவசரமாக எங்காவது வெளியே கிளம்ப நினைத்தால் வயதானவர் களுக்குசெய்ய வேண்டிய கடமை, மருமகளைப் பிடித்து இழுக்கும். அவர்களுக்கு உப்புக் காரம் இல்லாமல் சாப்பாடு, குழந்தைகளுக்கு ஸ்பெஷலாக ரெஸிபி, கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு வேறுவிதமாக சமையல் என வேலை ரொம்ப நீளும். அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வர தாமதமாகும் நிலை ஏற்பட்டால், அதுவே பதற்றத்தை தோற்றுவித்துவிடும்.

இப்படி சமையலறையைச் சுற்றியே கூட்டுக் குடும்பங் களில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது பெரியவர்கள் ‘தான் எதுவும் செய்யமாட்டேன் என்பதும், செய்பவர்களை குற்றம் சொல்லி வருவதும்’ பிரச்சினைகளை பெரிதாக்கிவிடும். இதை பெரியவர்கள் உணர வேண்டும்.

கூட்டுக்குடும்பத்தில் பொறுப்பை கவனித்துக் கொள்பவர்கள், நினைத்த நேரத்தில் தூங்கவோ, எழவோ முடியாது. பொறுப்புகளை கவனிக்கும் மருமகள் ஓய்வு எடுக்க நினைத்தால் நடக்காது. அதை மீறி அவள் ஓய்வெடுத்தால் அதை ஒரு குற்றமாக்கிவிடும் நிலையும் உண்டு.

பெரும்பாலான வயதானவர்களிடம் ‘இவர்கள் நமக்கு வேலை செய்தால் என்ன? நம்மை ஏன் வேலை வாங்க வேண்டும்?’ என்ற எண்ணம் நிலை கொண்டிருக்கிறது. குடும்ப சூழ்நிலையை, நகரத்து வாழ்வின் யதார்த்தங்களைபுரிந்துகொள்ளாமல், தான் பெரியவர் என்ற அதிகார எண்ணத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் பிரச்சினை தவிர்க்க முடியாததாகி விடும்.

கிராமத்தில் மனிதர்களாக இருந்த வர்கள் இங்கு இயந்திரங்களாக மாறி ஓய்வின்றி உழைக்கவேண்டிய திருக் கும். அப்படி கணவனும், மனைவியும் உழைத்தால் தான் நகரங்களில் வாழ்க் கையை நகர்த்தமுடியும். அப்படிப்பட்ட சூழலில் பெரியவர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட் டால் உடனே அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுண்டு. இதில் யாரும், யாரையும் குறை சொல்ல முடியாது. அப்போது, ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மகனைப் பற்றி, ‘என்னை ஆஸ்பத்திரிக்குக்கூட அழைத்துப் போகமாட் டேங்குறான்’ என்று புலம்பு வது சரியாக இருக்காது. புலம்புவதை விட்டு விட்டு பெரியவர்களும் சூழ் நிலைக்கு தக்கபடி கொஞ்சம் மாறினால் வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.

(கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் எல்லா பெரியவர்களும் இப்படி இல்லை. பெரும்பாலானவர்கள் இளந்தலை முறைக்கு வழிகாட்டியாகவும், பாதுகாப்பாளராகவும் திகழ்கிறார்கள். அவர் களது அனுபவங்கள் புதிய தலை முறைக்குத் தேவை. அவர்கள் சற்று புலம்பும் ரகமாக இருந்தாலும் அவர்களை அனுசரித்து செல்லவேண்டியது அவசியம். இன்று இளைஞர்களாக இருப்பவர்கள், நாளை நாமும் முதியோர்கள்தான் என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் பதியவைத்துக்கொண்டு அதற்கு தக்கபடியே முதியோர்களிடம் நடந்துகொள்ளவேண்டும்)

மேலும் செய்திகள்