பயங்கரவாதிகள் தொடர்பான வழக்கை விசாரிக்க தனிவிரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும்

பயங்கரவாதிகள் தொடர்பான வழக்கை விசாரிக்க தனிவிரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று கவர்னர் வஜூபாய் வாலா தெரிவித்துள்ளார்.

Update: 2017-12-16 23:12 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று ‘தேசிய பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை‘ என்ற பெயரில் நடந்த கலந்தாய்வு மாநாட்டை தொடங்கி வைத்து கவர்னர் வஜூபாய் வாலா பேசியதாவது:–

மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதி அஜ்மல் கசாப் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த பயங்கரவாதி தூக்கிலிடப்பட்டார். ஆனால் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட தினத்தை சில சமூக விரோதிகள் கடைபிடித்து வருகிறார்கள். இதுபோன்ற அவலத்தை என்னவென்று சொல்வது? என்று தெரியவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட தினத்தை கடைபிடிப்போரையும் தூக்கிலிட வேண்டும்.

மும்பை தாக்குதலுக்கு அஜ்மல் கசாப் தான் காரணம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவருக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க பல ஆண்டுகள் ஆனது. இதுபோன்ற பயங்கரவாதிகள், தேசத்துரோகிகளை எக்காரணத்தை கொண்டும் உயிரோடு விடக்கூடாது. அவர்களுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கிடைத்தே தீர வேண்டும். பயங்கரவாதிகளை 3 நாட்களில் தூக்கில் போட வேண்டும். இல்லையெனில் அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொல்ல வேண்டும்.

இந்திய ராணுவம் மிகவும் பலம் வாய்ந்தது. இதனால் நம்முடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இஸ்ரேல் போன்ற சிறிய நாடுகளில் ராணுவம் பலம் வாய்ந்ததாக உள்ளது. மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. அதே நேரத்தில் நமது நாட்டில் உள்ள சட்ட திட்டங்களின் உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது.

அதனால் தேசத்துரோகிகள், பயங்கரவாதிகளுக்கு சட்டரீதியாக தண்டனை கிடைப்பதில் ஆண்டு கணக்கில் ஆகிறது. இந்த நிலை மாற வேண்டும். பயங்கரவாதிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக பயங்கரவாதிகள் மீதான வழக்கை விசாரிக்கவும், அதனை விரைந்து முடிக்கவும் தனிவிரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டியது அவசியமானதாகும்.

இவ்வாறு கவர்னர் வஜூபாய் வாலா பேசினார்.

மேலும் செய்திகள்