நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?
பெங்களூருவில் புத்தாண்டையொட்டி சன்னி லியோன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–
பெங்களூரு,
சமீபத்தில், கேரளாவில் நடிகை சன்னிலியோன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது, பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பெங்களூருவில் நடைபெறுவதை விரும்பவில்லை. புத்தாண்டு தினத்தில் பெங்களூருவில் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். போலீஸ் அனுமதி இன்றி சன்னி லியோன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த விளக்கத்தை ஏற்ற ஐகோர்ட்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு எந்த தடையும் விதிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.