கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2017-12-16 22:12 GMT

தானே,

தானே மாவட்டம் பிவண்டி மங்கள் மார்க்கெட்டில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விட ஆசாமிகள் வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 3 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். எனவே போலீசார் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்தினர்.

அந்த பையில் 10, 20, 50, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கான கள்ளநோட்டுகள் இருந்தன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆரிப் அன்சாரி (வயது53), அப்துல் லத்தீப் (30), ரகுப் பையாஸ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்