தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க ஒளிரும் வேகத்தடுப்புகள் அமைப்பு

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க ஒளிரும் வேகத்தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.

Update: 2017-12-16 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் பிரிவு சாலை உள்ளது. இந்த பகுதியில் 3 சாலைகள் சந்திக்கும் இடம் ஆகும். மேலும் இது முக்கியமான சாலை என்பதால் வாகனங்களும் இந்த சாலை வழியாக அதிக அளவில் சென்று வருகின்றன. மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனால் இந்த பகுதியில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வந்தனர். இருப்பினும் விபத்துகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகளும், பலர் காயமும் அடைகின்றனர். பகல் நேரத்திலேயே அடிக்கடி விபத்து ஏற்படும் போது இரவு நேரங்களில் இன்னும் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுகின்றன.

இதனை தடுக்கும் வகையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் இந்த சாலையில் இரவு நேரத்தில் ஒளிரும் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.

இதையடுத்து அந்த பகுதியில் ஏற்கனவே இருந்த பிளாஸ்டிக் தடுப்புகளை அகற்றி விட்டு அதில் நகரக்கூடிய இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். இந்த தடுப்புகள் ஒளிரும் வகையில் உள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் இந்த பகுதியில் வரும் போது வேகத்தை குறைத்து செல்வதோடு, விபத்துகளும் குறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு ஒளிரும் தடுப்புகள் அமைத்துள்ள போலீசாரை, பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்