குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும்

குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்தார்.

Update: 2017-12-16 23:15 GMT

திருவட்டார்,

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று குமரி மாவட்டத்திற்கு வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் குமரி மாவட்டத்திற்கு வந்த அவருக்கு மாவட்டத்தின் எல்லையான களியக்காவிளையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து திருவட்டார் அருகே பிலாங்காலை பகுதியில் புயலால் சேதமடைந்த ரப்பர் தோட்டத்தை பார்வையிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–

குமரி மாவட்டம் ஒகி புயலால் மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ளது. விவசாயிகள், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். அந்தந்த குடும்பங்களில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

அகில இந்திய அளவில் விவசாயிகள் நஷ்டத்தினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயிகளை அரசு கைவிட கூடாது. புயலால் பாதித்த பாகுதிகளை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு சென்றுள்ளார். அவர் கருணை உள்ளத்தோடு கவனிப்பார் என நினைக்கிறேன்.

ஒகி புயலால் ரப்பர், வாழை, தென்னை, நெல் உள்பட அனைத்து பயிர்களும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் உடனே மக்களை சென்றடைய வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆதங்கங்களை வெளிப்படுத்தும் போது கோபப்படவோ, எரிச்சல் அடையவோ கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், ச.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் பிரகாஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜெயராஜ், கேரள மாநில தலைவர் கருணாகரன் பிரகலாதன், பொது செயலாளர் சஜிகுமார், குமரி மாவட்ட பாசனதுறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் புலவர் செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்