ரெயில்வே மேம்பால பணி: சிமெண்டு உத்திரங்கள் பொருத்தும் பணி தொடங்கியது

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணி நடைபெறும் நிலையில் ரெயில்வே பகுதியில் சிமெண்ட் உத்திரங்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

Update: 2017-12-16 21:45 GMT

விருதுநகர்,

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள லெவல் கிராசிங்கில் மேம்பால கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ரெயில்வே துறையும் மாநில நெடுஞ்சாலைத்துறையும் ஒருங்கிணைந்து இந்த பணியை செய்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினரின் பணி பல்வேறு காரணங்களால் தாமதப்பட்டு வருகிறது. ஆனால் ரெயில்வே துறையினர் ரெயில் பாதை செல்லும் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணிகளை முடித்து, சிமெண்ட் உத்திரங்களை பொருத்தும் பணியை தொடங்கி விட்டனர்.

ரெயில்வே பகுதியில் 6 சிமெண்ட் உத்திரங்கள் பொருத்தப்படுகின்றன. ஒவ்வொரு சிமெண்ட் உத்திரங்களும் 65 டன் எடை கொண்டதாகும். இந்த 6 உத்திரங்களும் ரெயில்வே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தூண்கள் மீது கிழ, மேலாக பொருத்தப்படுகிறது. தூண்களை பொருத்த 110 டன் எடையை தூக்ககூடிய 2 ராட்ச கிரேன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்பணியை கண்காணித்து வரும் மதுரை ரெயில்வே கோட்ட என்ஜினீயர் கணேசன் கூறியதாவது:–

ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ரெயில்பாதை பகுதியில் சிமெண்ட் உத்திரங்கள் பொருத்தும் பணியை கட்டுமான பணியை மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனமே செய்து வருகிறது. ரெயில்வே துறை அதிகாரிகள் இதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். 65 டன் எடையுள்ள சிமெண்ட் உத்திரங்களை தாங்கும் வகையில் தான் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உறுதி தன்மை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இன்று (நேற்று) தொடங்கிய இந்த பணி நாளை (இன்று) முடிவடையும். இதனால் நெடுந்தூர ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் இருக்காது.

இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மதுரை ரெயில்வே கோட்டம் கீழ்கண்ட ரெயில்போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது. மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை–செங்கோட்டை பயணிகள் ரெயில் சேவையும், செங்கோட்டையில் இருந்து 12 மணிக்கு புறப்படும் செங்கோட்டை–மதுரை பயணிகள் ரெயில் சேவையும் 17, 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு–திருச்செந்தூர் பயணிகள் ரெயில் 17–ந்தேதி திண்டுக்கல்லோடு நிறுத்தப்பட்டுவிடும். 18–ந்தேதி மதுரையோடு நிறுத்தப்படுகிறது. இதே போன்று திருச்செந்தூர்–பாலக்காடு பயணிகள் ரெயில் 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லையோடு நிறுத்தப்படுகிறது. நாகர்கோவில்–கோவை பயணிகள் ரெயில் சாத்தூரோடு நிறுத்தப்படுகிறது. கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரெயில் மதுரையில் நிறுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்