ரகசியமான ரகசியங்கள் : சஞ்சய் காந்தி
இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளையான சஞ்சய் காந்தி பற்றிய தகவல்கள்...
அடுத்தவர்களின் ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் நமக்கு எப்போதுமே தனி ஆர்வம் உண்டு. அதிலும் பிரபலங்களின் வாழ்வில் ஒளிந்து கிடக்கும் செய்திகள் என்றால் கேட்கவா வேண்டும். அத்தகைய ரகசியங்களைத் தரும் இத்தொடரில் இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளையான சஞ்சய் காந்தி பற்றிய தகவல்களை இந்த வாரம் முதல் பார்க்கலாம்.
அம்மாவுடன் உறவினர் வீட்டுக்குப் போன போது அங்கிருந்த ரெயில் பொம்மை அவனுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. ஓட்டி பார்க்க ஆசைப்பட்டான். அந்த வீட்டுப் பையனோ தர மறுத்து விட்டான். திரும்பும் வழியெல்லாம் ரெயில் பொம்மை நினைப்புதான். வீட்டுக்கு வந்ததும் அந்த பொம்மை வேண்டும் என்று கேட்டான்.
‘இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் கடைகளை மூடி இருப்பார்கள்; காலையில் வாங்கித்தரச் சொல்கிறேன்’ என்ற அம்மாவின் சமாதானத்தை ஏற்கவில்லை. ‘இப்பவே வேண்டும்’ என அழுது புரண்டான். ஒரே ஆர்ப்பாட்டம்.
அந்த நேரத்தில் வீட்டுக்குள் தாத்தா வந்தார். பேரனின் அழுகையைச் சமாளிக்க பொம்மையை எப்படியாவது வாங்கி வருமாறு ஆட்களை அனுப்பினார். இரண்டு மணி நேரம் அலைந்து மூடிய கடையைத் திறந்து பொம்மையோடு வந்து சேர்ந்தார்கள்.
பிரதமர் நேருவின் பேரனுக்கு இது கூட கிடைக்காவிட்டால் எப்படி?
பேரன் சஞ்சய் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்த பிறகே தாத்தா நேருவுக்கு நிம்மதி. அடிக்கடி இப்படி நடக்கும். கேட்டது கிடைக்காவிட்டால் ரகளை தான்.
இந்த வயதிலேயே இவ்வளவு பிடிவாதக்காரனாக இருக்கிறானே என்ற கவலையும் நேருவுக்குள் ஏற்பட்டது. அம்மா இந்திராவுக்கும் அப்படியோர் எண்ணம் இருந்தாலும், தன்னைப் போலவே நினைத்ததைச் சாதிப்பவனாக தன் பிள்ளை இருப்பதை நினைத்து பெருமிதம் கொண்டார்.
இந்திரா காந்தியின் இரண்டாவது மகனாக 1946, டிசம்பர் 14-ந் தேதி பிறந்த சஞ்சய் காந்தி சிறு வயதில் இருந்தே தனிப்பிறவியாக வளர்ந்தான். அண்ணன் ராஜீவ் படிப்பு, விளையாட்டு, நண்பர்கள் என எப்போதும் உற்சாகமாக சுற்றிவந்தால், சஞ்சய் அதற்கு நேர்மாறாக இருப்பான். வகுப்பில் பாடங்களைக் கவனிக்க மாட்டான். யாரோடும் பழகவும் மாட்டான். எதையோ பறிகொடுத்தது போன்று முகம் முழுக்க சோகத்துடன் இருப்பான். போதாக்குறைக்கு உடல் பலவீனம் வேறு. அடிக்கடி காய்ச்சல், இருமல் வந்துவிடும்.
இரண்டு பள்ளிகளுக்குப் பிறகு மிகப்பெரிய மனிதர்களின் வீட்டுப் பிள்ளைகள் தங்கி படிக்கும் டேராடூனில் உள்ள டூன் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டான். இங்கும் பிரச்சினைதான். படிப்பதில் இருந்து தப்பிக்க எதாவது ஒரு காரணம் சொல்லி, அடிக்கடி மருத்துவமனையில் போய் படுத்துக்கொள்வான்.
நாய் போன்ற விலங்குகளும் கிளி, குருவி உள்ளிட்ட பறவைகளும் அவனுக்குப் பிடித்தமானவை. பேரனுக்காக தங்களது பாரம்பரிய பங்களாவான அலகாபாத் தீன் மூர்த்தி பவனில் ‘குட்டி மிருகக் காட்சி சாலை’யை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் நேரு.
எல்லாவற்றையும்விட கார்கள் மீது சஞ்சய்க்கு கொள்ளைப்பிரியம். ரேடியோ, டெலிபோன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களைப் பிரித்துப் போட்டு எதாவது செய்து கொண்டிருப்பான். அவனுடைய அறையில் அவை நிறைந்திருக்கும்.
டூன் பள்ளிக்குப் போன பிறகு சஞ்சய்க்கு அவனைப் போலவே முரட்டுத்தனம் கொண்ட சிலர் நண்பர்களாக கிடைத்தனர். அந்தக் காலத்தில்தான் கார் மீதான சஞ்சயின் காதல் அதிகமானது. எங்கே காரைப் பார்த்தாலும் அதற்குள் சென்று ஆராய்ந்து பார்க்க ஆசைப்பட்டான்.
10 வயதில் டூன் பள்ளியில் சேர்க்கப்பட்ட சஞ்சய் மூன்றாண்டுகளைச் சிரமப்பட்டு நகர்த்தி இருந்தான். பள்ளிக்கூடத்திற்கோ தர்ம சங்கடமான நிலை. இருந்தாலும் வேறு வழியில்லை.
சஞ்சயின் குண நலன், படிப்பு ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளைப் பட்டியலிட்டு பெரிய அறிக்கை அனுப்பிவிட்டது. அதிரடியாக மகனைப் பள்ளியில் இருந்து திரும்ப அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் இந்திராகாந்தி.
பிரதமர் நேருவின் பேரனை டூன் பள்ளி வெளியேற்றிவிட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. ‘விடுதியில் இருந்து படிப்பது அவனுக்குக் கஷ்டமாக இருப்பதால், வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம்’ என்று நேரு மறுப்பு சொன்னார்.
டெல்லி புனித கொலம்பஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டான். டூன் பள்ளி போல கட்டுப்பாடுகள் இல்லாமல் நினைத்தபடி இருப்பதற்கான சுதந்திரம் இந்தப் பள்ளியில் கிடைத்ததால், சஞ்சய்க்கு மகிழ்ச்சி.
சஞ்சய் பிறந்ததிலிருந்தே இந்திராவுக்கும் அவரது கணவர் பெரோஸ்காந்திக்கும் முட்டல் மோதல்கள் ஏற்பட்டன. பிரிவதும் சேர்வதுமாக இருந்தார்கள். சஞ்சய்க்கு 14 வயதிருக்கும் போது பெரோஸ் மாரடைப்பால் திடீரென இறந்து போனார்.
இந்தக் காலக்கட்டத்தில், எப்போதும் அம்மா பிள்ளையாகவே வளர்ந்த சஞ்சய்க்கு கார் மீதான ஆர்வம் கிட்டதட்ட வெறியாகவே மாறிவிட்டிருந்தது. பள்ளிக் கூட வயதிலேயே கார் ஓட்ட கற்றுக்கொண்டதுடன், பார்க்கிற கார்களில் எல்லாம் ஏறி ஒரு சுற்று வர வேண்டும் என்ற ஆசையோடு இருந்தான்.
பழைய கார்களை அடிக்கடி வாங்கத் தொடங்கினான். அவற்றைப் பிரித்துப் போட்டு, புது உதிரி பாகங்களைச் சேர்த்து மீண்டும் ஓட வைக்கும் வேலைகளை மணிக்கணக்கில் செய்தான். எதுவுமே உருப்படியாக ஓடியதில்லை. பணமும் நேரமுமே வெட்டியாக கழிந்தது. அதற்காக சஞ்சய் கவலைப்பட்ட தில்லை. பிரேக் பிடிக்காத, லைட் எரியாத பழைய கார்களில் நண்பர்களை ஏற்றிக்கொண்டு சுற்றி வருவார். உயிரைக் கையில் பிடித்தபடியே நண்பர்களும் செல்வார்கள். நேருவின் பேரன் நட்பு என்றால் சும்மாவா?
அது 1964-ம் ஆண்டு. டெல்லியில் கார் திருட்டு அதிகம் நடந்தது. திருடு போன கார்கள் பழுதடைந்த நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாட்கள் கழித்து கண்டெடுக்கப்பட்டன. காவல்துறை கண்டுபிடிக்க முடியாமல் திணறியது. ராணுவ அதிகாரி ஒருவரின் காணாமல் போன கார் அடுத்த நாளே டெல்லி பாலம் விமான நிலையம் (இப்போது இந்திராகாந்தி விமான நிலையம்) அருகே கண்டெடுக்கப்பட்டது.
உள்ளே அடில் ஷர்யார் என்ற இளைஞன் மது போதையில் மயங்கிக் கிடந்தான். அவன் வேறு யாருமல்ல; சஞ்சயின் நெருங்கிய நண்பன். இந்திரா காந்தியின் ஆதர்ச நண்பர் முகமது யூனுசின் மகன். விவகாரம் வெளியே போகாமல் சுமுகமாக முடித்து வைத்தது டெல்லி போலீஸ். பெரிய இடத்து பிரச்சினையில் வேறென்ன செய்ய முடியும்?
ஆனால் ‘கரண்ட்’ பத்திரிகை இதை மோப்பம் பிடித்து செய்தி ஆக்கிவிட்டது. ஒரு படி மேலே போய் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் டொசூ கரகா, இந்திராவுக்கு நேரடி சவால் விட்டார். ‘கார் திருட்டுக்கும் இந்திராவின் மகன் சஞ்சய்க்கும் தொடர்பிருக்கிறது. முடிந்தால் தொடர்பில்லை என்று நிரூபியுங்கள்’ என்ற அறைகூவலுக்கு யாரிடம் இருந்தும் பெயருக்குக் கூட பதில் இல்லை.
மகனின் பயணிக்கும் பாதை பற்றியோ, அவனது சகவாசங்கள் பற்றியோ அம்மா இந்திரா பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை. இது சஞ்சயின் கார் கனவுகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
‘என் முயற்சியில் புதிய கார் தயாரிக்க வேண்டும்’ என்று நண்பர்கள், அம்மா இந்திரா, அண்ணன் ராஜீவ், தாத்தா நேரு என எல்லாரிடமும் சொன்னார் சஞ்சய்.
பேரனின் கனவு நேருவுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. புளங்காகிதம் அடைந்தார். அதற்கு முன்பு சஞ்சய் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து, முறையான அறிவைப் பெறுவதே சரியாக இருக்கும் என்று நேரு சொன்னார்.
‘அய்யய்யே... மீண்டும் வகுப்புகள், வாத்தியார்களா... அதெல்லாம் சரி வராது’ என்றார் சஞ்சய்.
‘பொறியியல் படிக்காமலே, ஒரு கார் தொழிற் சாலையில் பயிற்சி எடுத்தால் போதும்; கார் தயாரித்து விடலாம்’ என்பது அவரது அழுத்தமான எண்ணம்.
வேறு என்ன செய்ய? நேருவும் இந்திராவும் சஞ்சய் விருப்பத்திற்குத் தலையாட்டினர்.
நேருவின் நண்பரான கப்பல் அதிபர் தரம் தேஜா மூலம் இங்கிலாந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் தொழிற்சாலையில் மூன்றாண்டு பயிற்சிப் படிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சஞ்சய்க்குப் பெரும் செல்லம் கொடுத்த தாத்தா நேரு 1964 மே மாதம் திடீரென மரணமடைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் இறுதியில் இங்கிலாந்துக்குப் போனார் சஞ்சய். அங்கே ஒரு புது நண்பர் கூட்டம் சேர்ந்தது. கண்மூடித்தனமான கார் சவாரிகளை இங்கிலாந்திலும் நிகழ்த்தினார். போக்குவரத்து விதிகளை இஷ்டத்திற்கும் மீறினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நாட்டு ஓட்டுனர் உரிமம் வாங்காமலே வண்டி ஓட்டினார். மாட்டிக்கொள்ளும் போதெல்லாம் இந்திய தூதரக அதிகாரிகள் கெஞ்சிக் கூத்தாடி விடுவிப்பார்கள். சஞ்சய்க்கோ அதைப்பற்றி கவலை இல்லை.
ரோல்ஸ் ராய்ஸ் படிப்பு இரண்டே ஆண்டுகளில் அவருக்குச் சலித்துப் போனது. 1966 டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் போதையில் தாறுமாறாக கார் ஓட்டியதாக சஞ்சய் காந்தியைக் கைது செய்தது இங்கிலாந்து போலீஸ். எத்தனை முறைதான் அவர்களும் பொறுத்துப் போவார்கள்?
சஞ்சயைக் காப்பாற்றுவதற்காக சத்தமில்லாமல் இந்திய தூதரகத்தின் மூலம் வேறொரு வேலை செய்யப்பட்டது. பெயரை மாற்றி வேறொரு பாஸ்போர்ட் தயாரித்து அவரை விடுவித்தார்கள்.
அதாவது இந்திரா தன் மூத்தப் பிள்ளைக்கு ராஜீவ் என்றும் அடுத்தப் பிள்ளைக்கு சஞ்சீவ் எனவும் பெயரிட்டிருந்ததாகவும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகே அவர் பெயர் சஞ்சய் என்றானதாகவும் தகவல்கள் இருக்கின்றன.
ஏற்கனவே சலிப்பில் இருந்த சஞ்சய் மேற்கொண்டு பயிற்சியைத் தொடர விரும்பாமல் இந்தியா திரும்பினார். பிரதமரின் பேரனாக இங்கிருந்து சென்றவர் பிரதமரின் மகனாக வந்தார்.
ஆமாம்... நேருவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி யின் அமைச்சரவையில் அங்கம் வகித்த இந்திரா காந்தி, சாஸ்திரி மறைவுக்குப் பின் இந்தியாவின் பிரதமராகி இருந்தார்.
அம்மா பிரதமராகி இருக்கும் தேசத்தில் அவரது செல்லப்பிள்ளைக்கு கிடைக்கும் மரியாதையைத் தனியாகவா சொல்ல வேண்டும்?
ஜப்பானில் இருப்பதைப் போன்ற சிறிய ரக கார்களை இந்தியாவிலும் தயாரிக்கலாம் என்ற சிந்தனை இங்கே முன்பே ஏற்பட்டு, வடிவம் பெறாமல் நின்று போய் இருந்தது. அதெல்லாம் சஞ்சய் காந்திக்காக வேகம் பிடித்தன. கார் தயாரிப்பு உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. சஞ்சய் காந்தியும் விண்ணப்பித்தார். தனது நிறுவனத்திற்கு ‘மாருதி லிமிடெட்’ என்று பெயரிட்டார்.
இதில் மாருதி என்பது அவர் அப்போது காதலித்துக் கொண்டிருந்த பெண்ணின் பெயர். அவர் யார்? அந்தக் காதல் என்ன ஆனது? சஞ்சயால் மாருதி கார்களைத் தயாரிக்க முடிந்ததா? அவரது அரசியல் அவதாரம் இந்தியாவை உலுக்கியது எப்படி?