கடந்த 17 ஆண்டுகளில் மராட்டியத்தில் 26,339 விவசாயிகள் தற்கொலை
மராட்டியத்தில் கடந்த 17 ஆண்டுகளில் 26 ஆயிரத்து 339 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மராட்டிய வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.
நாக்பூர்,
தற்போது சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடந்து வருகிறது. எப்போதும்போல் நேற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல் விவசாயிகள் தற்கொலை பிரச்சினையை கையில் எடுத்தார்.
இதற்கு பதில் அளித்து மராட்டிய வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பேசினார். அப்போது 2001–ம் ஆண்டு முதல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் விவரங்களை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:–
2001–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மராட்டியத்தில் மொத்தம் 26 ஆயிரத்து 339 விவசாயிகள் தற்கொலை எனும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். இதில் 12 ஆயிரத்து 805 விவசாயிகள் தங்கள் நிலம் மலட்டுத்தன்மை அடைந்ததாலும், கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமலும், கடன் கொடுத்தவர்கள் தந்த தொந்தரவு காரணமாகவும் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்த வருடம் ஜனவரி 1–ம் தேதி முதல் ஆகஸ்ட் 15–ந் தேதி வரை மரத்வாடா மண்டலத்தில் மட்டும் 580 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதில் பீட் மாவட்டத்தில் அதிக பட்சமாக 115 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.