லால்குடி அருகே நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

லால்குடி அருகே நெடுஞ்சாலையோர பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2017-12-16 00:01 GMT
லால்குடி,

லால்குடியை அடுத்துள்ள பூவாளூர் - ஆலங்குடி வழியாக நெடுஞ்சாலை செல்கிறது. இதில் பூவாளூரில் இருந்து பின்னவாசல், காட்டூர், மேட்டுப்பட்டி, கோமாகுடி, செம்பரை, திண்ணியம், ஆலங்குடி வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறி வந்தனர். மேலும் இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனுக்களும் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் கலெக்டர் ராஜாமணி, திருச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டார். இதையடுத்து லால்குடி கோட்டாட்சியரின் அறிவுறுத்தலின்படி லால்குடி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையில், ஏற்கனவே முன்னறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

இதில் நெடுஞ்சாலை பணியாளர்கள் லாரிகள், பொக்லைன் எந்திரம் உதவியுடன் நேற்று பூவாளூர் பங்குனி வாய்க்கால் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 6 கடைகள் உள்பட பின்னவாசல் பகுதி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். இதையொட்டி லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்