சேலம் அரசு கல்லூரி வளாகத்தில் கிணற்றில் தவறி விழுந்து 5-ம் வகுப்பு மாணவன் சாவு

சேலம் அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் மீன்பிடித்தபோது 5-ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2017-12-15 23:35 GMT
சேலம்,

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
சேலம் குமாரசாமிப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த தம்பதி முருகேசன்-மாதேஸ்வரி. முருகேசனுக்கு சொந்த ஊர் வாழப்பாடி. இவர்களுக்கு ஹரிகரன், நவகீர்த்தன், சாரதி, சிபிகேசவன் என்ற 4 மகன்கள் உள்ளனர். சேலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த முருகேசன், கடந்த 2 மாதத்திற்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னர் மாதேஸ்வரி கம்மங்கூழ் கடை நடத்தி 4 மகன்களையும் படிக்க வைத்து வருகிறார். இவருடைய 4-வது மகன் சிபிகேசவன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் காலை 9 மணிக்கு மேல்தான் பள்ளி தொடங்கும். நேற்று காலை பள்ளிக்கு போகும்முன்பு, சிபிகேசவன் தனது நண்பர்கள் கவின், கவுதமன் ஆகியோருடன் சேர்ந்து சேலம் செரி ரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் விடுதி அருகே இருக்கும் கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க சென்றான்.

பாதுகாப்பு கருதி கிணற்றின் மேற்பரப்பில் கம்பி வலை போட்டு மூடப்பட்டிருந்தது. ஆனாலும், கிரீல்கள் வளைந்து நெழிந்தும் உரிய பராமரிப்பின்றி இருந்தது. கிணறு முழுமையும் தண்ணீரால் நிரம்பி இருந்தது. மீன்பிடிக்க சென்ற சிபிகேசவன், தனது இரு நண்பர்களுடன் கிணற்றின் கிரீல் கம்பி மீது நடந்து சென்று, நடுப்பகுதியில் அமர்ந்து உள்ளே தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வேளையில் எதிர்பாராதவிதமாக சிபிகேசவன், கிணற்றில் தவறி விழுந்தான். இதை பார்த்ததும் செய்வதறியாது திகைத்த நண்பர்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் கிணற்றில் விழுந்த சிபி கேசவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவல் அறிந்ததும் சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். மேலும் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் மூழ்கி பலியான சிபிகேசவன் உடலை மீட்டனர். அவனது உடலை பார்த்து தாய் மாதேஸ்வரி, அண்ணன் சாரதி ஆகியோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் மீன்பிடிப்பதற்காக சிறுவர்கள் 3 பேரும், காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து சென்றுள்ளனர். கிணற்றை சுற்றிலும் பிளாஸ்டிக் தம்ளர்கள் அதிகமாக கிடந்தன. அதாவது, அரசு கல்லூரி வளாகத்தில் இரவு வேளையில் மதுகுடிப்பவர்களும், மர்ம ஆசாமிகளும் சகஜமாக வந்து செல்கின்றனர் என புகார் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரசு கல்லூரியில் காவலாளியாக வேலைபார்த்த ஒருவர், அங்குள்ள கழிப்பறை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்போது சிறுவன் சிபிகேசவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். எனவே, தொடரும் சம்பவங்களை தடுக்க போதிய பாதுகாப்பு வசதியை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என கல்லூரி மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்