பாகூர் ஏரியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மூழ்கினார்
பாகூர் ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் தண்ணீரில் மூழ்கினார்.
பாகூர்,
புதுவை மாநிலம் பாகூரை அடுத்த நிர்ணயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் வைத்தியநாதன் (வயது 50), கந்தன் (40), சேட்டு (36) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் பாகூர் ஏரியில் மீன்பிடிக்கச் சென்றனர். ஏரியில் சிறிது தூரம் சென்றபோது ஆழம் அதிகமாக இருந்ததால் மீண்டும் அவர்கள் கரைக்கு திரும்பினர். இவர்களில் கந்தன், சேட்டு ஆகியோர் கரை ஏறினார்கள்.
அவர்களுடன் வந்த வைத்தியநாதனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஏரியில் இறங்கி அவரை தேடிப்பார்த்தனர். இரவு முழுவதும் தேடிப்பார்த்தும் வைத்தியநாதன் கிடைக்கவில்லை.
இது பற்றி ஊரில் உள்ள மீனவர்களுக்கும், பாகூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். நேற்று காலை ஏரிக்கு போலீசார் மற்றும் பாகூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பக்கிரி தலைமையில் 20–க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்று வைத்தியநாதனை தேடினர். பனித்திட்டு மீனவர்கள் தங்களது படகுகள் மூலம் ஏரியில் தேடினார்கள். ஆனால் வைத்தியநாதனை கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்போது பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளது. வைத்தியநாதன் கண்டுபிடிக்கப்படாதநிலையில் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி அவர் இறந்துவிட்டாரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.