முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்த அரசியல் கட்சிகள்– பல்வேறு அமைப்புகளுக்கு நன்றி விவசாய அமைப்பு நிர்வாகிகள் அறிக்கை
முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்த அரசியல் கட்சிகள்– பல்வேறு அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்து விவசாய அமைப்பு நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட நீர் பாசனத்துறை தலைவர் வக்கீல் வின்ஸ் ஆன்றோ, பூமி பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு தலைவர் பத்மதாஸ், பாசனசபை தலைவர் புலவர் செல்லப்பா, வேளாண் உற்பத்திக்குழு தலைவர் செண்பகசேகரபிள்ளை ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஒகி புயல் மற்றும் கனமழை காரணமாக ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் பேரழிவை சந்தித்துள்ளது. ரப்பர், வாழை, தென்னை என அத்து விவசாய பயிர்களும் அழிந்துபோய் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கின்றனர். 25–க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர். இந்தநிலையில் உயிர் இழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும், பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், பயிர்கள் இழப்பீட்டு தொகையை உயர்த்தி, நியாயமான வாழ்வாதார தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
அதன்படி கடைகளை அடைத்தவர்களுக்கும், பஸ்களை இயக்காமல் இருந்தவர்களுக்கும், தொழில் நிறுவனங்களை அடைத்தவர்களுக்கும், வேலை நிறுத்தம் வெற்றி பெறச்செய்வதற்கும் உழைத்த, ஒத்துழைத்த அனைத்து அமைப்புகளுக்கும், பா.ஜனதா, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும், வர்த்தக சங்கங்களுக்கும், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், கஷ்டங்களை தாங்கிய பொதுமக்களுக்கும் விவசாயிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும் என்றும் நம்புகிறோம். அதேவேளையில் இதற்கு பிறகும் அரசு செவிசாய்க்காமல் இருந்தால் அடுத்தகட்ட போராட்டங்கள் பற்றியும் ஆலோசித்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.